“மதுரையப் பத்தி பேசிருக்கேன்… மீம்ஸ் போட்றாதீங்க” – செல்லூர் ராஜு

அரசியல்

மதுரையில் கலைஞர் நூலக பணிகளைத் தவிர வேறு எதுவும் நடக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரையில் இன்று (ஜூலை 8) முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்தார். குடிநீர் பிரச்சினை தொடர்பாகப் பேசிய அவர், “தற்போது முல்லை பெரியார் மற்றும் வைகையில் அதிகளவில் தண்ணீர் இருப்பு உள்ளது. எனினும் மக்களுக்கு 2 நாள் முதல் 4 நாட்கள் இடைவெளியில்தான் குடிநீர் வழங்கப்படுகிறது. அதில் கழிவுநீரும் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுகிறது, உபயோகிக்க முடியாத நிலை உள்ளது.

மதுரையில் பல இடங்களிலும் சாக்கடை நீர் குடிநீர் குழாயில் கலக்கிறது. திமுக காலத்தில் தொடங்கப்பட்ட பாதாளச் சாக்கடைத் திட்டம் சரிவர அமைக்கப்படவில்லை. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மதுரையில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும். தமுக்கம் மைதானம், மீனாட்சி அம்மன் கோயில், பெரியார் பேருந்து நிலையம் போன்றவற்றில் செயல்படுத்தப்படும் சீர்மிகு திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

மதுரை மேயர் குறித்தும், நிர்வாக குறைபாடுகள் குறித்தும் பேசிய செல்லூர் ராஜு, “மதுரை மேயர் அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு இருக்கை ஒதுக்கவில்லை. அதிமுக கட்சிக்கு இடம் கொடுக்கவில்லை. இதுதான் திராவிட மாடலா? மத்திய அரசிடம் மாநில சுயாட்சி குறித்து பேசும் திமுக, முதலில் உள்ளாட்சி பிரதிநிதிகளை மதிக்க வேண்டும். திமுக அரசும், மாநகராட்சி பிரச்சனைகள் அனைத்தையும் உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும். இல்லையென்றால், பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் மதுரையை சிட்னிப் போல் உருவாக்குவோம், வைகையை தேம்ஸ் நதிக்கரைபோல் உருவாக்குவோம் என்றோம். இதற்கு நீங்கள் கிண்டலடித்தீர்கள். ஆனால் திமுக ஆட்சியில் மதுரை வளர்ச்சிக்காக ஒரு பைசா கூட செலவழிக்கப்படவில்லை. கலைஞர் நூலகப் பணிகள் தவிர இங்கு வேறு எந்த பணிகளும் நடைபெறவில்லை. மதுரைக்கு இரண்டு திமுக அமைச்சர்கள் இருந்தும் புதிய திட்டங்கள் எதுவும் கொண்டுவரவில்லை” என்று குற்றம்சாட்டினார்.

பின்னர், முன்னாள் அமைச்சர் காமராஜுக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்படுவது குறித்து கேள்வி எழுப்பினர். ”எனக்கு மதுரை தான் முக்கியம். முதலில் மதுரைக்கான பிரச்சனையைப் பற்றிப் பேசுவோம். பிறகு கட்சியைப் பற்றிப் பேசுவோம்” என்றார்.

அதோடு, “மதுரக் காரங்களா நான் இதுக்கு முன்னாடி பேசினதெல்லாம் மீம்ஸா போட்டீங்க. இப்போ மதுரைய பத்தி பேசிருக்கேன். இதை நியூசா போடுங்கப்பா” என்றபடி நன்றி சொல்லி முடித்தார்.

– கிறிஸ்டோபர் ஜெமா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *