சொத்துக்குவிப்பு வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் திமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி முதல்வர் ஸ்டாலினை இன்று (டிசம்பர் 22) சந்தித்தார்.
கடந்த 2006-11 திமுக ஆட்சிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்தது.
நீதிமன்ற தண்டனை அறிவிப்பிற்கு பிறகு பொன்முடி வசமிருந்த உயர்கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டது.
இந்தநிலையில், நீதிமன்ற தண்டனை அறிவிப்பிற்கு பிறகு இன்று முன்னாள் அமைச்சர் பொன்முடி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு, உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 15 நிமிடங்களாக இந்த சந்திப்பானது நடைபெற்றுள்ளது.
முன்னதாக, சென்னை சைதாப்பேட்டை பொன்முடி இல்லத்தின் வெளியே ‘உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி’, ‘நாடாளுமன்ற உறுப்பினர் கெளதமசிகாமணி’ என்ற பெயர் பலகைகள் வைக்கப்பட்டிருந்தது. நீதிமன்ற சிறை தண்டனை அறிவிப்பை தொடர்ந்து பொன்முடி இல்லத்தின் வாசலில் வைக்கப்பட்ட ‘உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி’ என்ற பெயர் பலகை நீக்கப்பட்டது. ‘நாடாளுமன்ற உறுப்பினர் கெளதமசிகாமணி’ என்ற பெயர் பலகை மட்டும் தற்போது உள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ஊழல் குற்றவாளி: உடைந்துபோன திமுகவின் கேடயம்!
பொன்முடியின் சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!