திமுகவில் மாவட்டச் செயலாளர்களுக்கான மனு தாக்கல் விறுவிறுப்போடு நடந்து கொண்டிருக்கிறது. இந்த வகையில் நேற்று (செப்டம்பர் 23) தர்மபுரி மேற்கு மாவட்டத்துக்காக மாசெ பதவிக்கு மனு தாக்கல் செய்திருக்கிறார் முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சரும் முன்னாள் அமமுக துணைப் பொதுச் செயலாளருமான பழனியப்பன்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி திமுகவில் சேர்ந்தார் பழனியப்பன். அமமுகவில் இருந்தபோது தன்னுடன் பயணித்த பலரையும் திமுகவுக்குக் கொண்டுவந்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி. அந்த வகையில்தான் பழனியப்பனை வீடு தேடிச் சென்று சந்தித்த செந்தில்பாலாஜி, ‘நீங்க திமுகவுக்கு வாங்க. உங்களுக்கு உரிய மரியாதையை முதல்வரிடம் பேசி நான் பெற்றுத் தருகிறேன்” என்றார். அதையடுத்து திமுகவுக்கு வந்த பழனியப்பன், தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களோடு பெரும் இணைப்பு விழாவையும் நடத்தினார். உடனடியாக தனக்கு எந்த பதவியும் தரப்படாவிட்டாலும் தொடர்ந்து திமுக நிகழ்ச்சிகளை ஆக்டிவ்வாக நடத்தி வந்தார் பழனியப்பன்.
இந்த நிலையில் செப்டம்பர் 23 ஆம் தேதி தர்மபுரி மேற்கு மாவட்டத்துக்காக மாவட்டச் செயலாளர் பதவிக்கு வேட்பு மனு செய்திருக்கிறார் பழனியப்பன். வேட்பு மனு தாக்கல் செய்த கையோடு மெரினாவுக்கு சென்று அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதையும் செய்திருக்கிறார் பழனியப்பன். திமுகவில் முதல் முறையாக அவர் மாவட்டச் செயலாளராக தேர்வு செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டதால் நேற்றே பெரும் கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டார்கள் பழனியப்பனின் ஆதரவாளர்கள்.
தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம், தர்மபுரி, பாலக்கோடு, பாப்பிரெட்டி பட்டி, அரூர் என ஐந்து தொகுதிகள் இருக்கின்றன.
பென்னாகரம் பாலக்கோடு தொகுதிகளை உள்ளடக்கிய தர்மபுரி மேற்கு மாவட்டத்துக்கு இன்பசேகரன் மாவட்டச் செயலாளராக இருந்தார். மீதி இருக்கும் தொகுதிகளை உள்ளடக்கிய தர்மபுரி கிழக்கு மாவட்டத்துக்கு தடங்கம் சுப்பிரமணி மாவட்டச் செயலாளராக இருந்தார்.
கடந்த அதிமுக ஆட்சியின்போது அப்போதைய அமைச்சர் கே.பி. அன்பழகனோடு நெருக்கமாக இருந்து பல பலன்களைப் பெற்றார் என்று தடங்கம் சுப்பிரமணி மீது தலைமைக்குப் புகார்கள் சென்றன. இன்பசேகரன் மீதும் வேறு சில புகார்கள் சென்றன. ஆனால் நடவடிக்கை எதுவும் இல்லை.
இந்த நிலையில் தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. இதனால் ஆட்சிக்கு வந்தபின் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தை தர்மபுரிக்கு பொறுப்பு அமைச்சராக்கினார் முதல்வர் ஸ்டாலின். மாவட்டத்தில் நிலவிய பல்வேறு கோஷ்டிப் பூசல்களை தலைமைக்கு எடுத்துச் சென்ற எம்.ஆர்.கே.. மாவட்ட அமைப்புகளை மாற்றுவது பற்றியும் பரிந்துரைத்தார்.
இதன்படி கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் விடுத்த அறிவிப்பில் தர்மபுரி கட்சி மாவட்ட வரையறைகளை மாற்றி அமைத்தார். அதன்படி தர்மபுரி, பென்னாகரம் ஆகியவை சேர்ந்து தர்மபுரி கிழக்கு மாவட்டமாகவும் மீதியிருக்கும் பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிபட்டி ஆகிய மூன்று தொகுதிகளை சேர்த்து தர்மபுரி மேற்கு மாவட்டமாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்போதே, இந்த மாற்றம் பழனியப்பனுக்காகவே செய்யப்பட்டது என்ற பேச்சு தர்மபுரி திமுகவில் எழுந்தது
அதை உறுதிப்படுத்துவது போல தர்மபுரி மேற்கு மாவட்டத்துக்கு செப்டம்பர் 23 ஆம் தேதி மாவட்டச் செயலாளர் பதவிக்காக வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார் பழனியப்பன். இவர்தான் தர்மபுரி மாவட்டச் செயலாளர் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது. தர்மபுரி கிழக்கு மாவட்டத்துக்கு தடங்கம் சுப்பிரமணி மாசெ ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பழனியப்பனுக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைப்பதன் மூலம் திமுகவில் கரூர், கோவை மாவட்டங்களை அடுத்து தர்மபுரியிலும் செந்தில்பாலாஜியின் ஆதரவு வட்டம் விரிவடைந்துள்ளது.
–வணங்காமுடி, வேந்தன்
ஆவுடையப்பன் vs அப்பாவு : அறிவாலயத்தில் நேரு நடத்திய பஞ்சாயத்து- முழு விவரம்!
டிஜிட்டல் திண்ணை:சீனியர்களுக்கு மாற்றுப் பதவிகள்! சபரீசன் வைக்கும் புது செக்!