“மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசினால், அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை ஐயப்பந்தாங்கலில் நேற்று (ஆகஸ்ட் 10) நடைபெற்ற திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாமில் பேசிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்,
“தங்களுக்கு கூட்டம் கூடினால் நாமும் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தோடு நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு அறிவு இருக்காது. நடிகர்கள் அரசியலுக்கு வந்து சாதித்தது எம்ஜிஆர், ஜெயலலிதாவோடு போய்விட்டது. எம்ஜிஆரோடு ஜெயலலிதா இருந்ததால் அரசியலில் சாதித்தார். அதற்கு பிறகு நடிகர்கள் யாரும் அரசியலில் சாதிக்க முடியவில்லை. இனிமேல் நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் அவர்களது கனவு எடுபடாது” என்று தெரிவித்தார்.
எம்ஜிஆரையும் ஜெயலலிதாவையும் இணைத்து ஆட்சேபிக்கத்தக்க வகையில் தா.மோ.அன்பரசன் பேசியது அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது,
“தா.மோ.அன்பரசன் அமைச்சராக இருப்பதற்கு தகுதியும் கிடையாது அறிவும் கிடையாது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி நாகரிகமற்ற முறையில் பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?
மறைந்த தலைவரை கொச்சையாக விமர்சனம் செய்வதை எந்த தலைவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உலகம் போற்றும் வகையில் ஜெயலலிதாவின் புகழ் இருக்கிறது.
அப்படி போற்றப்படக்கூடிய ஒரு தலைவரை இன்றைக்கு சிறுமைப்படுத்தும் வகையில் நாகூசும் வார்த்தையை தா.மோ.அன்பரசன் பயன்படுத்தியுள்ளார். இதுபோன்று அவர் பேசினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். இதோடு அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சுதந்திர தினவிழா… தமிழகம் முழுவதும் காங்கிரஸ் இருசக்கர வாகன பேரணி!
பாகிஸ்தான் வீரர் அர்ஷத் புதிய ஈட்டி வாங்க உதவிய நீரஜ் சோப்ரா… பார்டரை தாண்டிய நட்பு!