அதிமுக பொதுச்செயலாளர் பதவி தேர்தலைப் பொறுத்தவரை எந்த அவசரமும் இல்லாமல் சரியான நேரத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு, இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி நேற்று (மார்ச் 18) வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியை பிக் பாக்கெட் அடிக்க பார்க்கிறார் என்று ஓ. பன்னீர்செல்வம் விமர்சித்திருந்தார். மேலும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் தரப்பு மனுக்கள் மீதான விசாரணை இன்று (மார்ச் 19) அவசர வழக்காக விசாரணைக்கு வரவுள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, “நேற்றைய தினம் ஓபிஎஸ் தரப்பு அளித்த பேட்டியில், குறிப்பாக ஓபிஎஸூம் பண்ருட்டி ராமச்சந்திரனும் அளித்த பேட்டிகள் விரக்தியின் உச்சம். அரசியலில் ஒரு பண்பாடு இருக்க வேண்டும். அவர்கள் பிக் பாக்கெட் ஆகிய பல்வேறு விதமான வார்த்தைகளைப் பயன்படுத்தும் போது, அவர் நிதானத்தில் இருக்கிறாரா? நிதானம் இல்லாமல் பேசுகிறாரா? என்று அதிமுகவினரும் தமிழ்நாட்டு மக்களும் எள்ளி நகையாடக்கூடிய அளவிற்கு இருக்கின்றது.
பிக் பாக்கெட் என்று சொல்கிறார். ஆனால் அந்த வார்த்தைக்கு உண்மையில் பொருத்தமானவர் ஓபிஎஸ் தான். தொண்டர்கள் கோவிலாக கருதக்கூடிய அதிமுக அலுவலகத்தைக் குண்டர்களுடன் வந்து சூறையாடியது பிக் பாக்கெட் இல்லையா?. இதற்காக அவர் மீது கிரிமினல் வழக்குப் போடப்பட்டுள்ளது.
அவர் கட்சியின் நலனுக்காக எந்த காலத்திலாவது செயல்பட்டுள்ளாரா?.
அதேபோல பண்ருட்டி ராமச்சந்திரன், அவர் வயதிற்கு ஏற்ற வார்த்தைகளை பயன்படுத்தாமல் தரக்குறைவான வார்த்தைகளால் எடப்பாடியாரை மற்றும் கழகத்தின் உயர் நிர்வாகிகளைப் பேசினார்.
ஓபிஎஸிடம் வாங்கிய பணத்திற்கு விஸ்வாசமாக கைக்கூலியாக செயல்படுகிறார். அவருக்கும் அதிமுகவிற்கும் எந்த முகாந்திரமும் கிடையாது. அதிமுகவை விமர்சிப்பதற்கும் அவருக்கு முகாந்திரம் கிடையாது. பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு அரசியல் சகுனி.
எடப்பாடியின் பிரம்மாண்ட வளர்ச்சியை ஓபிஎஸ் கம்பெனியால் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஊடகங்களை மட்டும் நம்பி அரசியல் செய்யும் குரூப் தான் ஓபிஎஸ் தரப்பு.
சசிகலா, டிடிவி தினகரன் உடன் ஒன்றிணைந்து செயல்பட தயார் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியுள்ளார்.
கட்சிக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. 1 கோடியே 46 லட்சம் தொண்டர்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் எடப்பாடியாரின் தலைமையை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
சமுத்திரம் போன்ற ஆதரவு எடப்பாடியாருக்கு இருக்கின்ற நிலையில், கூவம் போல் ஓபிஎஸ் இருக்கிறார். கூவமும் சமுத்திரமும் ஒன்றாகிடுமா?. இவர்கள் மக்களால், தொண்டர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்” என்று பேசினார்.
தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில் இருந்து பொதுச்செயலாளர் பதவி தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு,
“தகுதியுடையவர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்தால் ஏற்றுக் கொள்ளப்படும். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்யத் தகுதி இல்லை.
பொதுச்செயலாளர் தேர்தலில் எந்த அவசரமும் இல்லை. தலைமை இல்லாமல் கட்சியை வழிநடத்த முடியாது. சரியான நேரத்தில் முடிவெடுக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், ஆட்சி அதிகாரம், பண பலம், அதிகார துஷ்பிரயோகம் ஆகிய மூன்றையும் திமுக ஒட்டுமொத்தமாகப் பயன்படுத்தியது. ஆனால் நிராயுதபாணியாகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலத்தை மட்டும் கொண்டு எடப்பாடியார் தேர்தலை எதிர்கொண்டார். எனவே உண்மையான வெற்றி எங்களுக்குத் தான்.
திமுகவை பொறுத்தவரை ஒரு முறை ஆட்சிக்கு வந்தால், தொடர்ந்து இன்னொரு முறை ஆட்சிக்கு வராது. அதனால் எடப்பாடியார் தலைமையில் தான் ஆட்சி அமையும். மேலும் இடைத்தேர்தலை வைத்து பொதுத்தேர்தலைக் கணிக்க முடியாது.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் போது பாருங்கள் 40-ம் நமதே நாடும் நமதே என்ற அடிப்படையில் எங்களது கூட்டணி வெற்றி பெறும்” என்றார்.
மோனிஷா
சதுரகிரி கோவிலில் பக்தர்கள் தரிசனம்!
சிவா வீட்டில் நேரு: பிரஸ் மீட்டுக்கு முன்னும் பின்னும் நடந்தது என்ன?