கொரோனா தொற்று பாதிப்பால், அதிமுக முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி சண்முகம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி சி.வி.சண்முகம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றிருந்தார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு டிசம்பர் 20-ஆம் தேதி திண்டிவனத்திற்கு திரும்பியுள்ளார். அப்போது அவருக்கு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு இருந்துள்ளது.
உடனடியாக தனது குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுள்ளார். அவரது ஆலோசனையின் பேரில் நேற்று (டிசம்பர் 21) மாலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில், கொரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் சி.வி.சண்முகம் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், கூடுதல் படுக்கை வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.
கொரோனா பாதிப்பு எதிரொலியால் தெலங்கானாவில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு எச்சரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 594 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…