ஜார்கண்ட் முன்னாள் முதல்வரும், ஆளும் ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவருமான சம்பாய் சோரன் இன்று (ஆகஸ்ட் 30) பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்திருக்கிறார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே கடந்த சில மாதங்களாக ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் பல்வேறு அதிரடி அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பு ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் நிலமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றார். அதனையடுத்து ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் முதல்வராகப் பதவியேற்றார்.
அவர் 5 மாதங்கள் முதல்வர் பதவி வகித்த நிலையில், ஜாமினில் கடந்த ஜூன் மாதம் வெளியே வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார்.
இதனால் முதல்வர் பதவியில் இருந்து விலக நேரிட்ட தன்னை ஜேஎம்எம் கட்சித் தலைமை அவமானப்படுத்தியதாகவும், சில கசப்பான சம்பவங்கள் நடைபெற்றதாகவும் சம்பாய் சோரன் குற்றஞ்சாட்டினார். மேலும் அரசியலில் இருந்து விலகுவது, புதிய கட்சி தொடங்குவது அல்லது வேறு கட்சியில் சேருவது ஆகிய 3 வழிகள் இருப்பதாக அவர் கூறியிருந்தார்.
இதற்கிடையே கடந்த 26ஆம் தேதி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவை சந்தித்தார். தொடர்ந்து ஜேஎம்எம் கட்சியின் துணைத் தலைவர் பதவியையும் அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் தலைநகர் ராஞ்சியில் இன்று நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட சம்பாய் சோரன் பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஜார்க்கண்ட் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன், வங்கதேசத்தில் இருந்து ஊடுருவலை தடுப்போம். கட்சி எனக்கு என்ன பொறுப்புகளை வழங்குகிறதோ, அதை நிறைவேற்றுவேன்” என சம்பாய் தெரிவித்துள்ளார்.
“கோல்ஹான் புலி” என்று அழைக்கப்படும் சம்பாய் சோரன் ஒருமுறை சுயேட்சையாகவும், ஐந்து முறை ஜே.எம்.எம். கட்சி சார்பிலும் நின்று சரைகேலா சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
முதல்வர் பதவி உட்பட ஜார்க்கண்ட் அமைச்சரவையில் இதுவரை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தொழிலாளர் மற்றும் வீட்டுவசதி, போக்குவரத்து என பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் இருந்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அலகாபாத் டூ சென்னை… உயர்நீதிமன்ற நீதிபதியாகிறார் ஷமீம் அகமது
ஹேமா கமிட்டி அறிக்கை: குஷ்பூ, ராதிகா, குட்டி பத்மினி சொல்லும் அதிர்ச்சி தகவல்கள்!