தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த ஆணையத்தின் ரகசிய அறிக்கையை காக்க தவறியதாக திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (ஆகஸ்டு 21) அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதிமுக ஆட்சிகாலத்தில் கடந்த 2018 மே 22 அன்று நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து பேரணி சென்ற பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணையின் முடிவில், 3000 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கை கடந்த மே மாதம் 18ம் தேதி தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கிடையே அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பான முக்கியத் தகவல்கள் சமீபத்தில் பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனையடுத்து, ”அறிக்கையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்த பின், நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையுடன், ஆணையத்தின் இறுதி அறிக்கை சட்டமன்றத்தில் வைக்கப்படும் என மாநில சட்டத்துறையின் அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.
மக்களை திசை திருப்ப அறிக்கை வெளியீடு!
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த ஆணையத்தின் இறுதி அறிக்கை பத்திரிக்கைகளில் வெளியானதை கண்டித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “இந்தியாவிலேயே இன்று நிர்வாக திறமையற்ற ஒரு மாநில அரசு உண்டு என்றால் அது தற்போது தமிழகத்தில் உள்ள விடியா திமுக அரசாகும்.
கொலை. கொள்ளை, பாலியல் பலாத்காரம், பள்ளி கல்லூரி மாணவிகளின் மர்ம மரணங்கள் போன்றவை திமுக ஆட்சியில் நாள்தோறும் நடைபெற்று வருகிறது.
ரோம் நகரம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்து கொண்டிருந்தது போல், தமிழகம் சீரழிந்து போன நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.
தற்போது நாட்டில் நடக்கும் அத்தனை அக்கிரமங்களையும் கண்டு கொதிப்படைந்து போய் உள்ள மக்களை திசை திருப்ப அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை வெளியீடு என்ற ஒரு நாடகத்தை ஸ்டாலின் அரங்கேற்றி இருக்கிறார்.
ரகசிய ஆவணம் எப்படி கிடைத்தது?
ஆணையத்தின் இறுதி அறிக்கை கடந்த மே மாதம் சீல் இடப்பட்ட உறையில் வைத்து ரகசிய அறிக்கையாக தான் இந்த அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
3000 பக்கங்கள் கொண்டதாக கூறப்படும் இந்த அறிக்கையில் என்ன பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது யாருக்கும் தெரியாது. இந்த அரசும் இதுவரை வெளியிடவில்லை.
ஆனால் அறிக்கையில் என்னென்ன உள்ளது என்பது பற்றி ஒரு ஆங்கில் வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அரசிடம் உள்ள ரகசிய ஆவணம் ஒன்று, அந்த ஆங்கில் ஏட்டினருக்கு எப்படி கிடைத்தது? அந்த ஆங்கில ஏட்டிற்கு ஆட்சியாளர்களே தகவலை கசியவிட்டார்களா? அல்லது அரசு ரகசியத்தை காக்க முடியாத இந்த துப்புக்கெட்ட அரசின் கையாலாகாத்தனமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் தமிழகத்தில் நடக்கும் கொள்ளைகளிலும், திருட்டுகளிலும் முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறையினரே ஈடுபட்டுள்ளனர்.
அரும்பாக்கம் தனியார் வங்கி கொள்ளையில் அச்சிறுப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கே தொடர்பு இருப்பது வெளிச்சமாகியுள்ளது.
அதேபோல் அருணா ஜெகதீசன் அறிக்கையை அந்த ஆங்கில ஏடடாளர்களும், ஆட்சியாளர்களும் இணைந்து பாதுகாப்பு மிகுந்த தலைமை செயலகத்தில் இருந்து திருடிச் சென்றார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.
முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்!
அரசிடம் இருந்த ரகசிய ஆவணம், செய்தி நிறுவனம் கைக்கு போக காரணமாக இருந்தவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து அவர்களை கைது செய்ய வேண்டும்.
மேலும் இந்த ரகசிய ஆவணத்தை காக்க தவறிய, இந்த அரசின் முதலமைச்ச திரு.மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார் ஜெயக்குமார்.
கிறிஸ்டோபர் ஜெமா
குருவிகளை போல் சுட்டுக் கொலை! தூத்துக்குடி சம்பவம்-விசாரணை அறிக்கை!