22 மாதங்கள் எம்.எல்.ஏ-வாக இருந்த இளங்கோவன்

Published On:

| By Selvam

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (டிசம்பர் 14) காலமானார்.

கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் 18 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் திருமகன் ஈ.வே.ரா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்தசூழலில், 2023-ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி திருமகன் ஈ.வே.ரா மாரடைப்பால் காலமானார். இதனால் ஈரோடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என்று திமுக தலைமை அறிவித்தது. இதையடுத்து, திருமகன் ஈ.வே.ராவின் தந்தை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதிமுக தரப்பில் கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இளங்கோவனுக்காக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இடைத்தேர்தலில் 1,10,156 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட தென்னரசுவை 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.

தொடர்ந்து காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளிலும், பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று வந்த இளங்கோவன், கடந்த நவம்பர் 27-ஆம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி இளங்கோவன் இன்று காலமானார். ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று 22 மாதங்கள் எம்.எல்.ஏ-வாக இருந்த இளங்கோவனின் மறைவு அந்த தொகுதி மக்களிடையை பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

செல்வம்

இளங்கோவன் மறைவு… அஞ்சலி செலுத்த தமிழகம் வரும் ராகுல்

எதிர்க்கட்சித் தலைவரின் உரிமை மறுக்கப்படுகிறது : ராகுல் காட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel