இடைத்தேர்தல்: மின்னம்பலம் செய்தியை உறுதிப்படுத்திய இளங்கோவன்

அரசியல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனது மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட காங்கிரஸ் கட்சியிடம் வாய்ப்பு கேட்டிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகனுமான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி, மாரடைப்பால் மரணமடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

evks elangovan says his son will contest

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட கோரி அவரது ஆதரவாளர்கள் வற்புறுத்தி வந்தனர்.

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மூச்சுவாங்குதல் உள்ளிட்ட உடல்நல பிரச்சனைகள் இருப்பதால் போட்டியிட தயக்கம் காட்டி வருவதாகவும், இதனால் தனது இளைய மகன் சஞ்சய் சம்பத்திற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க காங்கிரஸ் மேலிடத்திடம் அவர் கோரிக்கை வைத்து வருவதாகவும் மின்னம்பலம்.காம் இணையதளத்தில் நேற்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, இடைத்தேர்தலில் தாம் போட்டியிட போவதில்லை என்றும் தனது மகன் சஞ்சய் சம்பத்தை வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் கட்சியிடம் கோரிக்கை வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

evks elangovan says his son will contest

அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதியை ஒதுக்கியதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கும், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக-வினர் நேற்று முதல் தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் இரண்டு நாட்களில் வேட்பாளரை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்கும் என்று நினைக்கிறேன். நான் இந்த தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று முடிவெடுத்துள்ளேன். இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும். இளைஞர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எங்கள் கட்சியிலும் நான் அதனை தெரிவித்து விட்டேன்.

என்னுடைய இளைய மகன் சஞ்சய் சம்பத்தை தேர்தலில் வேட்பாளராக நிறுத்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடமும், டெல்லி தலைமையிடமும் கோரிக்கை வைத்துள்ளேன். இருந்தாலும் இன்னும் சில பேர் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆகவே இது குறித்து காங்கிரஸ் மேலிடம் விரைவில் முடிவெடுப்பார்கள். காங்கிரஸ் மேலிடம் எந்த முடிவெடுத்தாலும் அதற்கு நான் கட்டுப்படுவேன்.

அதிமுக நான்கு அணிகளாக பிரிந்துள்ளார்கள். அவர்களிடம் ஒற்றுமை இல்லை. குழப்பத்தில் இருக்கிறார்கள். அவர்கள் சேர்ந்து வேட்பாளரை நிறுத்தினாலும் தனித்தனியாக வேட்பாளரை நிறுத்தினாலும் திமுக கூட்டணி இந்த இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும்.

பாஜக என்பது ஊதிப்பெரிதாக்கப்பட்ட ஒரு பலூனைப் போன்றது. அண்ணாமலையும் பாஜகவும் வெத்துவேட்டு என்பது இந்த தேர்தலில் வெளிப்படும்.” என்றார்.

செல்வம்

போட்டியில்லை; யாருக்கும் ஆதரவு இல்லை: பாமக அறிவிப்பு!

“விரக்தியின் விளிம்பில் இருக்கிறார் ஓபிஎஸ்”-ஜெயக்குமார் விமர்சனம்!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *