ஈவிகேஸ் இளங்கோவன் ஓரிரு நாட்களில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனக் காஞ்சிபுர மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் சிவராமன் கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன், எம்எல்ஏவாக பதவியேற்றதைத் தொடர்ந்து டெல்லி சென்று அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதைத்தொடர்ந்து நேற்று (மார்ச் 15) மாலை சென்னை திரும்பினார்.
இதுபோன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்த நிலையில் நேற்று மாலை அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதனால் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். அவரது மனைவி வரலட்சுமி உடனிருந்து கவனித்து வருகிறார்.
திடீரென ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த தகவல் அறிந்து ராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்ற காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் சிவராமன் நேரில் நலம் விசாரித்தார்.
இதன்பின் நேற்று இரவு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஈவிகேஎஸ் இளங்கோவன் தேர்தல் வெற்றிக்குப் பிறகு டெல்லிக்குச் சென்று தலைவர்களைச் சந்தித்து விட்டு மாலை 4.30 மணிக்குத் தான் சென்னை திரும்பினார். சாதாரண நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரை நேரடியாக நாங்கள் சந்தித்துப் பேசினோம். நன்றாகப் பேசிக் கொண்டிருக்கின்றார்.
இந்த நேரத்தில் ஏன் வந்தீர்கள்?. நான் நன்றாக இருக்கிறேன். கவலைப்படாதீர்கள். விரைவில் வீட்டுக்கு வந்துவிடுவேன் என்று எங்களுக்கு ஆறுதல் சொல்லும் அளவுக்குத் தைரியமாக இருக்கிறார்.
நாளை(இன்று) அல்லது நாளை மறுதினம் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு ஏற்கனவே வீசிங் பிரச்சினை உள்ளது” எனக் கூறினார்.
பிரியா
பெண் வாடிக்கையாளருக்கு நள்ளிரவில் மெசேஜ் அனுப்பிய ரேபிடோ ஓட்டுநர்!
எடப்பாடி உருவப்படம் எரிப்பு: இரவில் இடைநீக்கம்… அதிகாலையில் சேர்ப்பு!
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு இ-சேவை மையத்தில் பணி!
மத்திய ஆயுதப் படையைச் சேர்ந்த 436 பேர் தற்கொலை: காரணம் என்ன?