ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு : ஸ்டாலின், உதயநிதி நேரில் அஞ்சலி!

Published On:

| By Kavi

மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

உடல் நலக் குறைவு காரணமாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று (டிசம்பர் 14) காலமானார்.

அவரது மறைவு அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் மிகவும் வேதனையை ஏற்படுத்துகிறது என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

இந்தநிலையில் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு மாலை அணிவித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “தந்தை பெரியாரின் பேரன், முத்தமிழறிஞர் கலைஞர் மீது மாறா பற்றுக் கொண்டவர்.எதையுமே வெளிப்படையாகப் பேசும் ஆற்றலுக்கு சொந்தக்காரர். நம்முடைய அரசியல் பயணத்தில் வழிகாட்டி.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அவருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பை பெற்றோம்.

அதேபோல, ஈரோட்டில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், சிறப்புத்திட்டச் செயலாக்கத்துறையின் முன்னெடுப்பில் தந்தை பெரியாரின் பூர்வீக இடத்துக்கான பட்டாவை அண்ணனிடம் வழங்கிய போது, அதற்காக தமிழ்நாடு அரசையும், முதலமைச்சர், நம்மையும், அவர் வாழ்த்திப் பேசியது இன்றும் நம் மனதில் நிழலாடுகிறது.

அண்ணன் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களின் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்துக்கு மட்டுமன்றி, தமிழ்நாடு அரசியல் களத்திலும் பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தார் – நண்பர்கள் – காங்கிரஸ் தொண்டர்கள் அனைவருக்கும் என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பிரியா

திருவண்ணாமலை தீப விழா : பக்தர்கள் கூட்டம் குறைவு – ஏன்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel