தமிழகத்தில் போதைப் பொருட்களை ஒழிப்பதில் அனைவரும் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
முதலமைச்சர் ஆலோசனை
சென்னையில் கலைவாணர் அரங்கில், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் போதைப்பொருளை ஒழிப்பது தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரிப்பது கவலையும் வருத்தமும் அளிக்கிறது. போதைப்பொருள் ஒழிப்பில் நாம் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். முழு ஆற்றலையும் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனை, பயன்பாட்டை தடுக்கவேண்டும்” என்றார்.

போதைப்பொருளை தடுக்கவேண்டும்
“போதைப்பொருள் நம் மாநிலத்திற்குள் நுழைவதை தடுத்தாக வேண்டும். எல்லாவற்றிலும் வளரும் தமிழகம் போதைப் பொருள் போன்ற எதிர்மறை விஷயங்களில் வளர்ந்துவிடக்கூடாது. போதைப்பொருட்களை பயன்படுத்தக் கூறும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை.
போதை என்பது அதை பயன்படுத்தும் தனிமனிதனின் பிரச்சினை அல்ல, அது சமூகப் பிரச்சினை. சமூகத்தில் குற்றங்களைத் தடுக்க போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கவேண்டும்” என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

போதை என்பது சமூகத் தீமை
போதைப் பொருட்கள் தான் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் நடக்க காரணமாக இருக்கிறது. போதைப் பொருள் பழக்கம் என்பது சமூகத் தீமை, அதை நாம் அனைவரும் சேர்ந்து தடுத்தாக வேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் போதைப்பொருள் பயன்படுத்தாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும்.
போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளவேண்டும். பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப்பொருள் விற்பனையாவதை தடுக்கவேண்டும். போதைப்பொருள் விற்கமாட்டேன் என்று வியாபாரிகள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். போதைப்பொருள் விற்கும் அனைவரையும் போலீஸ் கைது செய்யவேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
கலை.ரா
கூட்டணியால் அல்ல… கூட்டணியை உடைத்ததால் 8வது முறை முதல்வராகும் நிதிஷ்குமார்!