அதைப்பற்றி பேசினால் கோபப்படுவேன்… அமைச்சர் எ.வ.வேலு காட்டம்!

Published On:

| By Kavi

திருவள்ளுவர் பற்றி சிறுகுழந்தைக்கு தெரிந்தது கூட வானதி சீனிவாசனுக்கு தெரியவில்லை என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

சென்னை, கொளத்தூர். பெரியார் நகர் அரசு மருத்துவமனை வளாகத்தில், ரூ.109.82 கோடி மதிப்பீட்டில், 97 ஆயிரம் சதுரடியில், 6 தளங்களுடன் கூடுதலாக கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவமனை கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை இன்று (ஜனவரி 24) பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதன் பின் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவமனை குறித்து அமைச்சர் வேலு விளக்கமளித்து பேசினார்.

அவரிடம் வள்ளுவர் கோட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டதை தொடர்ந்து, அமைச்சர் வேலு, “வள்ளுவர் கோட்டத்தை, தை மாதம் திறக்க முயன்றோம். பெரும் மழையினால் காலதாமதம் ஏற்பட்டது. வள்ளுவர் கோட்டத்தைச் சுற்றி வெளிப்பூச்சு வேலை அதிகமாக உள்ளது. கட்டடத்தின் உள்பகுதியில் வேலை குறைவுதான் இன்னும் அதிகபட்சம் 60 நாட்களில் வள்ளுவர் கோட்டப் பணிகள் அனைத்தும் முடிந்து விடும்” என்றார்.

மேலும் அவர், திருவான்மியூர் முதல் அக்கரை வரை. 6 வழிச்சாலை அமைக்க, நிலஎடுப்பு பணிகளுக்கு செலவினம் 2009 ஆம் ஆண்டு, ரூ.10 கோடியாக இருந்தது. தற்பொழுது நிலஎடுப்புப் பணிகளுக்கு ரூ.1000 கோடியாக உயர்ந்துவிட்டது. நிலஎடுப்புப் பணிகள் 98% முடிவடைந்துவிட்டது. ஒரு பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவாக அனைத்து பணிகளும் முடிவடைந்து விடும்” என்றார்.

குமரியில் வள்ளுவர் சிலை அமைக்க அடிக்கல் நாட்டியதே ஆர்எஸ்எஸ்தான் என்ற நிலையில், வள்ளுவரை களவாட முயல்வது திமுகதான் என்று பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் சொல்கிறாரே என்ற கேள்விக்கு, ”கலைஞர் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் எங்களுக்கு அய்யன் திருவள்ளுவர்தான்.

“மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்” என்று குறளே இருக்கிறது.

அருட்பிரகாச வள்ளலாரையும், அய்யன் திருவள்ளுவரையும் நாங்கள் கைவிடவில்லை. திமுக தான் கொண்டாடுகிறது. முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அய்யன் வள்ளுவருக்கு சிலை நிறுவியவர் கலைஞர். அய்யன் திருவள்ளுவர், மதத்திற்கு அப்பாற்பட்டவர். அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர். அதனால்தான் வள்ளுவர் எழுதிய திருக்குறளை உலகப் பொதுமறை நூல் என்று சொல்கிறோம்.

கன்னியாகுமரியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு சான்றாக உள்ளது. கன்னியாகுமரியில் உள்ள சிறு குழந்தையை கேட்டால் கூட தெரியும். ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர்தான், அய்யன் திருவள்ளுவர் சிலையை அமைத்து, திறந்து வைத்தார் என்று சொல்வார்கள். சிறு குழந்தைக்கு தெரிந்த விஷயம் கூட வானதி சீனிவாசனுக்கு தெரியாமல் போனதுதான் ஆச்சரியமாக உள்ளது” என்று கூறினார்.

பெரியார் குறித்த சீமானின் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “நோ கமெண்ட்ஸ் என்று சொன்ன அமைச்சர் வேலு எழுந்து நின்று நான் பெரியாரிஸ்ட். அதைப்பற்றி பேசினால் கோபப்படுவேன்” என்று பதிலளித்தார்.

முன்னதாக சிவகங்கையில் கடந்த 21ஆம் தேதி கள ஆய்வு நிகழ்ச்சியின் போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “வள்ளுவர், வள்ளலார் போன்று தமிழகத்தில் சமத்துவத்தை பேசிய மாமனிதர்களை ஒரு கூட்டமே களவாட முயற்சிக்கிறது” என்று கூறியிருந்தார்.

இதற்கு வானதி சீனிவாசன், “கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையை அமைத்ததோடு, அருகில் வள்ளுவர் சிலை அமைக்க தீர்மானித்த ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் ஏக்நாத் ரானடே, கடந்த 1979ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய், ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி, முதல்வர் எம்ஜிஆர், அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் ஆகியோரை கொண்டு சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார்” என்று அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share