தமிழக காங்கிரஸ் தலைவரான கே.எஸ். அழகிரி, ‘இன்று சாயந்தரமே கூட நான் மாற்றப்படலாம்’ என்று சத்தியமூர்த்தி பவனில் இன்று (டிசம்பர் 29) நடந்த கூட்டத்தில் பேசி அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே.எஸ். அழகிரி கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அந்த பதவியில் நியமிக்கப்பட்டார். அவர் தலைவராக இருந்து நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகிய மூன்று தேர்தல்களையும் எதிர்கொண்டார்.
இந்த நிலையில் கடந்த இரு மாதங்களாக அழகிரியை தலைவர் பதவியில் இருந்து அகற்றக் கோரி சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை, முன்னாள் மாநில தலைவர்கள் ஈவிகேஸ் இளங்கோவன், கே.வி. தங்கபாலு, திருநாவுக்கரசர் ஆகியோர் கடுமையாக முயற்சி செய்து வருகிறார்கள். டெல்லி சென்று சோனியாவிடமும், காங்கிரஸ் அகில இந்திய தலைவர் கார்கேவிடமும் அழகிரி பற்றி முறையிட்டனர். அதோடு கடந்த இரண்டு மாதங்களாக அழகிரி கலந்துகொள்ளும் எந்த நிகழ்விலும் இந்த தலைவர்கள் கலந்துகொள்வதில்லை.
இந்த நிலையில் இன்று கையோடு கை கோர்ப்போம் என்ற திட்டம் பற்றி விவாதிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் காலை 11 மணிக்கு கூடியது. கே.எஸ். அழகிரி தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்படலாம் என்று சில நாட்களாகவே நிர்வாகிகள் மத்தியில் தகவல்கள் அலையடிக்கும் நிலையில் இன்றைய கூட்டத்தில் அழகிரியின் பேச்சு சற்று வித்தியாசமாக இருந்தது. பகல் 12.30 மணிக்கு மைக் பிடித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி,
“காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக நான் தலைவராக இருக்கும் இந்த பதவி காலத்தில் உண்மையாக கடுமையாக உழைத்து வருகிறேன். தேர்தல்களில் கூட்டணி கசப்புகளை வெற்றிகரமாக கடந்திருக்கிறோம். ஜெயலலிதா காலத்தில் காங்கிரஸ் தரப்பில் கூட்டணி பேசச் சென்றார்கள். அப்போது தன்னிடம் கூட்டணி பேச வந்த நான்கு பேருக்கும் தேர்தல் சீட் இல்லை என்று மறுத்தார் ஜெயலலிதா. கூட்டணி பேச சென்றவர்களுக்கே சீட் இல்லை என்ற நிலையையும் கூட்டணிகள் ஏற்படுத்தின.
கடந்த முறை ராஜ்யசபா பதவியை திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு அளித்தபோது எனக்கு அந்த வாய்ப்பை எடுத்துக் கொள்ளும் உரிமை இருந்தது. ஆனால் திரு. சிதம்பரம் அவர்களுக்கு வாய்ப்பு இருப்பதாக அறிந்தவுடன் நான் அந்த பதவிக்கு முயற்சி செய்யவே இல்லை. அந்தப் பக்கம் நான் திரும்பக் கூட இல்லை. அப்போது நான் மாநில தலைவர் என்ற முறையில் அகில இந்திய தலைவர் சோனியா காந்தியை சந்திக்க நேரம் கேட்டேன். நான் ராஜ்ய சபா கேட்டுதான் சந்திக்க முயற்சி செய்வதாக கருதி அம்மையார் கூட என்னை சந்திக்க தயங்கினார்கள். ஆனால் ஒரு மாநில தலைவரை சந்திக்காமல் இருக்க முடியாதல்லவா… அதனால் என்னை சந்தித்தார்கள். அப்போது நான், ‘அம்மா கூட்டணியில் ராஜ்யசபா தருவதாக சொல்கிறார்கள். யாருக்கு தரலாம்’ என்று நான் கேட்டதும் என்னை ஆச்சரியமாக பார்த்தார் சோனியா.
நான் எந்த பதவிக்கு எப்போதும் ஆசைப்பட்டதில்லை. பல பேர் பதவி கேட்டும் பதவியை பறிக்க கோரியும் டெல்லிக்கு போய் வருகிறார்கள். ஆனால் நான் மாநில தலைவராக இருக்கும் காலத்தில் பதவி கேட்டு டெல்லிக்குப் போனதில்லை. ஐந்தாறு முறைதான் நான் டெல்லியே போயிருக்கிறேன். நான் பதவி கேட்டு யார் வீட்டு வாசல்படியையும் மிதிக்கும் பழக்கம் கொண்டவனில்லை.
எல்லாமே மாற்றத்துக்கு உட்பட்டதுதான். எனது இருக்கையும் மாற்றத்துக்கு உட்பட்டதுதான் என்பது எனக்குத் தெரியும். இப்போது கூட நான் பேச எழுந்து வந்தவுடன் எனது இருக்கையில் தம்பி விஜய் வசந்த் அமர்ந்துகொண்டார். (ஸ்ரீவல்ல பிரசாத்துடன் பேசுவதற்காக அழகிரி நாற்காலியில் அமர்ந்திருந்தார் விஜய் வசந்த். அதைக் குறிப்பிட்டதால் சிரிப்பு). இன்று சாயந்தரமே மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நான் மாற்றப்படலாம். அப்படி மாற்றினால் புதிய தலைவரை அந்த இருக்கையில் அமர வைத்துவிட்டு திருப்தியோடுதான் செல்வேன்” என்று பேசினார் அழகிரி.
கடந்த நவம்பர் 15 ஆம் தேதி சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் நெல்லை காங்கிரசாருக்கும் அழகிரி ஆதரவாளர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் ரத்தக் காயம் ஏற்பட்டதை அடுத்து தமிழக காங்கிரஸ் மாநிலப் பொருளாளர் ரூபி மனோகரன் மீது கடும் கோபம் கொண்டார் அழகிரி. அவரை நீக்கக் கோரி மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால் அழகிரியின் முயற்சிக்கு டெல்லி மேலிடம் முட்டுக் கட்டை போட்டது. அப்போதில் இருந்தே செல்வப் பெருந்தகை, இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர் ஆகியோர் அழகிரிக்கு எதிராகத் திரும்பினார்கள். தொடர்ந்து அழகிரிக்கு ஒத்துழைக்காமல் இருந்து வருகிறார்கள்.
இந்த பின்னணியில்தான் சத்தியமூர்த்தி பவனில் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் தனது பதவி நிரந்தரமல்ல என்று அழகிரி ஆவேசமாக பேசியிருக்கிறார். அழகிரியே மாநிலத் தலைவர் பதவி பற்றி பேசியிருப்பதால் விரைவில் தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் பதவிக்கு புதியவர் நியமிக்கப்படலாம் என்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரத்தில்.
–ஆரா
தவறான உறவால் வாய்ப்புகளை இழந்தேன்: நடிகை அஞ்சலி