தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (ஜூன் 29) நடைபெற்ற காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரையாற்றினார்.
அவர், ”நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றியைப் பெற்ற பெருமிதத்துடன் இந்தப் பேரவைக்கு நாங்கள் வந்துள்ளோம். நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவில் நூற்றுக்கு நூறு வெற்றியைப் பெற்று புகழ் மாலையைச் சூட்ட வேண்டும் என்று நான் உறுதி எடுத்து பயணம் தொடங்கினேன். எடுத்த உறுதியில் வென்று நூற்றாண்டு நாயகருக்கு புகழ்மாலை சூட்டிய பெருமையோடு உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.
நடைபெற்றது நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும், எதிர்க்கட்சிகள் என்னைக் குறி வைத்தும், இந்த திராவிட மாடல் அரசை விமர்சித்தும்தான் தேர்தல் களத்தில் அதிகம் பேசினார்கள். திராவிட மாடல் ஆட்சியின் செல்வாக்கைக் குறைத்துக்காட்ட அவர்கள் செய்த உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்களை மக்கள் முறியடித்து, “செய்கூலி சேதாரம் இல்லாமல்” முழுமையான வெற்றியை வழங்கினார்கள்.
ஆளும் திமுக அரசின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. நான் ஆட்சிப் பொறுப்பேற்ற காலம் முதல், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணிநேரமும் நாட்டு மக்களுக்கு நல்ல பல திட்டங்களைத் தீட்டி வந்துள்ளேன் என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்ததன் அடையாளம்தான் இந்த 100 விழுக்காடு வெற்றி.
சட்டமன்றத் தேர்தலில், ‘வாக்களித்த மக்கள் வாக்களிக்காத மக்கள்’ என்ற பாகுபாடின்றி, அனைவருக்கும் கடந்த மூன்றாண்டு காலத்தில் ஏராளமான நன்மைகளைச் செய்துள்ளோம். அதற்கான அங்கீகாரத்தை வாக்குகள்
மூலமாக மக்கள் நமக்கு அளித்துள்ளார்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நின்று, வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வரும் இரண்டாண்டு காலமும் இதே போன்ற ஈடு இணையற்ற திட்டங்களைத் தீட்டித் தந்து, 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் மகத்தான வெற்றியை நாங்கள் பெறுவோம். இதனை மமதையோடு நான் சொல்லவில்லை; மனச்சாட்சிப்படி செயல்படும் இந்த ஸ்டாலின் மீதும் திராவிட மாடல் அரசின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் துணிச்சலோடு சொல்கிறேன்” என்று ஸ்டாலின் பேசியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
INDvsSA : தோனி மாதிரி கோலிக்கும் ஒரு அருமையான வாய்ப்பு இருக்கு!
”விக்கிரவாண்டியில் பணம் வெல்லாது” : டாக்டர் ராமதாஸ்