சாம்சங் போராட்டம் வாபஸ்.. நடந்தது என்ன? – அமைச்சர் வேலு பேட்டி!

அரசியல்

தொழிற்சங்கம் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சாம்சங் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று (அக்டோபர் 15) போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் இன்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் பேசியபோது, “2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சாம்சங் நிறுவனத்தில் 3,707 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டது. சாம்சங் தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள்.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை மற்றும் அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் தொழிலாளர்களுடன் 8 முறை பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்விளைவாக நிர்வாகம் தரப்பில், தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார்கள். ஆனால், தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வந்தது.

இந்தநிலையில், வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர என்னுடைய தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டார். நேற்றும் இன்றும் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகம் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான சூழ்நிலை எட்டப்பட்டுள்ளது. இரண்டு தரப்பும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

வேலைநிறுத்தத்தை வாபஸ் வாங்கி நாளை மறுதினம் முதல் வேலைக்கு செல்வதாக தொழிலாளர்கள் சம்மதித்துள்ளார்கள். அதேபோல, ஆலை நிர்வாகம் சார்பில், தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம், அவர்களுக்கு தேவையான சலுகைகளை செய்து கொடுப்போம் என்ற உத்தரவாதத்தை கொடுத்துள்ளனர்.

தொழிற்சங்கம் தொடங்குவது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.

தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதற்கு தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. போராட்டம் நடைபெற்ற இடத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக, தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் வழக்கு போட்டிருக்கலாம். தொழிலாளர்கள் மீது வழக்கு போட வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு கிடையாது.

சாம்சங் பிரச்சனையால் கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை. இன்றைக்கு காலையில் கூட கூட்டணி கட்சி தலைவர்கள் என்னை தொடர்புகொண்டு இந்த பிரச்சனையை சுமூகமாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அறிவுரை கூறினார்கள். நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சாம்சங் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

மழையிலும் மதுக்கடைகளை திறப்பதுதான் திராவிட மாடல் சேவையா?: அன்புமணி கேள்வி!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *