உயர்நீதிமன்ற மதுரை கிளை குறித்த தனது பேச்சுக்கு அமைச்சர் எ.வ.வேலு இன்று (ஜூலை 5) வருத்தம் தெரிவித்துள்ளார். அதைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மதுரை அண்ணா நகரில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று (ஜூலை 4) நடைபெற்றது. அதில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு, தமிழ்நாட்டில் கலைஞர் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார்.
மதுரை உயர்நீதிமன்ற கிளை
அப்போது மதுரை உயர்நீதிமன்ற கிளை குறித்து பேசுகையில், “தென்மாவட்ட மக்கள் வழக்கு நடத்துவதற்கு அதிக பொருள் செலவு செய்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய தேவை இருந்தது. அப்படிப்பட்ட நிலையில் மத்திய அரசிடம் போராடி மதுரைக்கு உயர்நீதிமன்ற கிளையை கொண்டு வந்தது முன்னாள் முதல்வர் கலைஞர் போட்ட பிச்சை” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த பேச்சு அரசியல் மட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு மதுரை கிளை குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
எனக்கே மன உளைச்சல்
முதலில் தனது பேச்சு குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்வியை வரவேற்பதாக தெரிவித்த அவர், “பொதுக்கூட்டத்தில் இப்படி ஒரு வார்த்தையை பயன்படுத்தியது இன்று காலையில் செய்தித்தாளில் படித்த பின்பு தான் தெரிய வந்தது. அதனால் எனக்கே மன உளைச்சல் ஏற்பட்டு விட்டது.
உயர்நீதிமன்ற மதுரை கிளை கலைஞர் கொடுத்த கொடை என்பதற்கு பதிலாக தவறான வார்த்தையை பயன்படுத்தி விட்டேன். நீதிமன்றங்கள் மீதும், நீதிபதிகள் மீதும் நான் பெரும் மரியாதை வைத்துள்ளேன்.
இந்நிலையில், பொதுக்கூட்டத்தில் பேசிய வார்த்தையை தற்போது திரும்பப் பெற்றுக் கொள்வதுடன் மட்டுமல்லாமல் அதற்காக வருத்தமும் தெரிவித்து கொள்கிறேன்” என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
விஷம்போல் ஏறும் காய்கறி விலை: பன்னீர் கண்டனம்!
செந்தில்பாலாஜி வழக்கு: மூன்றாவது நீதிபதி நியமனம்!