எட்டேகால் லட்சணமே!

அரசியல் சிறப்புக் கட்டுரை

ஸ்ரீராம் சர்மா

எட்டேகால் லட்சணமே ; எமனேறும் பரியே 

மட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேற் 

கூரையில்லா வீடே ; குலராமன் தூதுவனே 

ஆரையடா சொன்னாய் அது !

இரட்டுற மொழிதலுக்குப் பெயர் பெற்றவர் 15 ஆம் நூற்றாண்டின் காளமேகப் புலவர். திருவானைக்கா கோயிலின் பரிசாரகரான அவருக்கு வரதன் என்பது இயற்பெயர். அவரால் வம்பிகிழுக்கப்படாதவர்களே இல்லை எனலாம். தெய்வங்களையும் கூட அவர் விட்டாரில்லை. 

அன்றொரு நாள் ஔவை பெருமாட்டியை வம்பிக்கிழுக்கும் பொருட்டு – நான்கு இலைகளைக் கொண்ட ஆரைக் கீரை அதன் அடியில் ஒரு தண்டை கொண்டிருப்பதை மறைபொருளாக வைத்து ‘சுருக்’ என விடுகதை ஒன்றை விட்டாராம். விடுகதையின் ஈற்றில் பெண்மையை எள்ளும் படியான ‘அடி’ என்பதையும் கோர்த்து குறும்பு கொப்பளிக்க கேட்டாராம்…

“ஒரு காலடி ; நாலிலைப் பந்தலடி”  

அவர் ஆரைக் கீரையைத்தான் கோர்த்துவிடுகிறார் என்பதை உணர்ந்த நாவன்மைக்குப் பெயர் போன ஔவைப் பெருமாட்டி அறிவுச் சூடேறி காளமேகத்தை நோக்கி அடித்த நான்கு அடிதான் மேற்கண்ட வெண்பா ! 

வெண்பாவின் பின்புலம் குறித்த செவிவழிச் செய்திகள் பலபட உண்டு. எனினும் தமிழுலகம் கொண்டது அதன் இலக்கிய சுவையை மட்டும்தான் !

இணையான தமிழாற்றல் கொண்ட தமிழ்க் குரிசிலார் இருவர் தங்களுக்குள் நாகரீகமாக அடித்துக் கொண்டு அதன் இலக்கியப் பலனை தமிழுக்கு அளித்த பொற்காலம் அது.   

இன்றைய நவீன காலமோ, ட்வீட்டர் – ஃபேஸ்புக் என முறுக்கலித்துக் கொண்டு நாகரீகத்தை விட்டொழித்து நிற்கின்றது. 

யார் வேண்டுமானாலும் – யாரைப் பற்றி வேண்டுமானாலும் – எதை வேண்டுமானாலும் எழுதி (?) அதனை உலகுக்கு அறிவிக்கலாம் என்பது அறிவியலால் எதுக்களிப்பட்ட கொச்சைப் பீடை என்பேன்.  

அது, இடுகாட்டில் வெளிப்படும் பேய்த் துணுக்கு ! அப்படியானதே அந்தப் பதிப்பாளரின் வாய் துடுக்கு ! 

*******

அன்று பாராளுமன்றத்தில், பேரறிஞர் அண்ணா சொன்னதாக ஒருவர் ட்வீட் போட, அதற்கு எதிர்வினை செய்கிறேன் பேர்வழி என காலம் காலமாய் போர்த்தி வைத்த தன் பிலுக்கத்தனத்தை குலுக்கிக் காட்டி விட்டார் விவரமற்ற அந்த பதிப்பாளர். 

Ettaegaal latchaname shriram sharma

என்ன சொன்னார் அண்ணா ?

“ஹிந்தியை கற்றுக் கொள்வதற்கு மூன்று மாதங்கள் போதும். அதற்கு  மேல் கற்றுக் கொள்ள அதில் என்ன இருக்கிறது ?“ என்றார்.

அண்ணா கேட்ட கேள்வியை எப்படி புரிந்து கொள்ள வேண்டும்.

ஹிந்தி மொழியதன் எழுத்துக்களை மொத்தமாய் கற்றுக் கொள்ள மூன்று மாதங்கள் போதும் என்பதை SARCASM ஆக அவர் சொன்னதாகவே கொள்ள வேண்டும்.

வெறும் முப்பது நாளில் ஹிந்தி மொழியை கற்றுக் கொள்ள சொல்லி இன்று புத்தக வியாபாரிகள் நச்சரிப்பதைப் பார்க்கிறோம். சொல்லப் போனால் ஒரு எழுத்து வடிவத்தின் பயன்பாட்டை உள் வாங்கிக் கொள்ள அந்தக் காலம் போதும்.  

அதைத்தான் அன்றந்த நாளில் அண்ணா SARCASM ஆக மொழிந்தார். 

ஹிந்தி மொழியின் பாற்பட்ட இலக்கியங்களை அவர் தூற்றி விடவில்லை. ஹிந்தி இலக்கியங்களில் சாரமில்லை என்றவர் சொல்லி விடவில்லை. ஹிந்தி மொழி இலக்கியங்களை பெரும் படிப்பாளரான பேரறிஞர் அண்ணா என்றும் குறைத்து மதிப்பிட்டாரில்லை. 

நாடாளுமன்றத்தில் அன்றவருகே புன்னகை பூத்தபடி அமர்ந்திருந்த இந்திய பொதுவுடைமை கட்சியின் தலைவர் பூபேஷ் குப்தா மற்றும் பாராளுமன்ற நாவன்மையாளரான வாஜ்பாய் போன்றவர்களே அதற்கு சாட்சி ! 

*******

அது சரி, பேரறிவாளர்களான வாஜ்பாய், பூபேஷ் குப்தா போன்ற தேசியத் தலைவர்களால் உணரப்பட்ட அண்ணாவின் அந்த நயத்தகு குறிப்பை ஒரு சராசரி வியாபாரியால் உணர்ந்து கொண்டுவிட முடியாதுதான்.

பேரறிஞர் அண்ணா என்பவர் யார் ? அன்றைய தமிழகத்தில் சாதி – மத – பேதம் பாராது கிராமங்கள் தோறும் ஓடியாடி ஊன்றி உழைத்த அவரது  உழைப்பென்ன ?

கலைஞர் கருணாநிதி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர், பேராசிரியர் அன்பழகன், நாவலர், ஈ.வெகி.சம்பத், கவியரசர் கண்ணதாசன் போலான மாபெரும் ஆளுமைகளை தன்னகத்தே கொண்டு அன்றந்த அரசியலை அவர் ஒருமுகப்படுத்திய ஆற்றல் என்ன ? 

அந்த பேருழைப்பின் பாற்பட்டு அவர் உண்டாக்கிய கோட்பாட்டதன் ஆழம் என்ன ? அந்தக் கோட்பாட்டின் வீச்சு இன்றளவும் தமிழகத்தை சூழ்ந்து ஆள்கிறது எனில் அவரது வீச்சு எத்தகையதாக இருந்திருக்க கூடும் என்பதையெல்லாம் அந்த விவரமற்ற வியாபாரிக்கு விரித்துரைக்க ஆளில்லாமல் போய்விட்டதால் நிகழ்ந்து விட்ட விபரீதம் அது. 

திராவிட சித்தாந்தத்தின் பேராசானாம் – பெருங்கொண்டலாம் – பீடுடைய பேரறிஞர் அண்ணா அவர்களைக் குறித்த அந்த ஆபாச ட்வீட்டை கிஞ்சித்தும் பொறுத்துக் கொள்ள முடியாது. 

*******

பைனரியை மட்டுமே பயின்று, கடல் கடந்து, பொருள் கொண்டு திரும்பிய அந்தக் கொச்சுக்கு தமிழுலகில் இருக்கும் ஒரே தகுதி பதிப்பாளர் என்பதே. அதுவோ, மூன்று உரிமையாளர்களைக் கொண்ட கூட்டு நிறுவனம். 

சரி, அந்த பதிப்பகம் தமிழுலகுக்கு இதுகாறும் செய்த பங்களிப்பு என்ன ? அதன் முகமாக தன்னைக் காட்டிக் கொள்ளும் அந்த முனைசுருட்டி செய்து காட்டிய தியாகம்தான் என்ன ? 

உ.வே.சா போல மீட்டெடுக்கப்படாத தமிழ் மண்ணின் இலக்கியங்களை எல்லாம் ஓடி ஓடி மீட்டெடுக்கப் போராடிப் பொருள் தோற்று விட்டாரா ? 

அல்லது ‘தமிழே, ஓ என் தமிழே’ என சர்வபரி தியாகமாக அர்ப்பணித்து வீழ்ந்தாரா எனில் இல்லையே. என்னதான் கிழித்து விட்டது அந்தப் பதிப்பகத்தின் திருக்கூத்துகள் ? 

அவரது வெளியீடுகள் மொத்தமும் அப்பட்டமான வியாபார நோக்கம் கொண்டவைகள் தானே. ஒன்று போட்டால் இரண்டு கிடைக்குமா எனும் ஆவலாதி மட்டும்தானே ? அது கூட தவறில்லை என்பேன் அந்த அளவிலேயே நின்று கொண்டிருந்தால்…

ஆனால், எல்லை கடந்து திராவிடத்தின் தலைமகனை ஏசிக் காட்டுவேன் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ? 

பதிப்புத் துறைக்காக பத்மஸ்ரீ பட்டம் பெற்ற சுப்பையா பிள்ளை அவர்களின் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – ஆழங்காற்பட்ட மணிமேகலை பிரசுரம் – பாரி நிலையம் – முல்லை பதிப்பகம் – வசந்தா பதிப்பகம் போன்ற பற்பல அர்பணிப்புப் பதிப்பகங்கள் இங்கிருக்க…

ஒரு சாதாரண வியாபார பதிப்பகத்தை வைத்துக் கொண்டு எல்லை கடந்து பிதற்றுக்கின்றோமே எனும் அறிவச்சம் ட்வீட்டிட்டவருக்கு இருந்திருக்க வேண்டாமா ?

மேம்பட்ட முன்னோர்களின் நாகரீகத்தை கொள்ளாமல் விட்டோமே என அசிங்கப்பட்டிருக்க வேண்டாமா ?  

ஈரல் கெட்டவன் எடுக்கும் கோழையான வாந்தி போல பேரறிஞர் அண்ணா குறித்தெல்லாம் பிதற்றி வைப்பது பெருங் கேவலம் எனும் கூச்சமும் நாணமும் வாழும் வழி பார்த்து வளர்ந்திருந்தால் தானாக வந்திருக்காதா ?

இல்லையே !

*******

அறிவியல் வழியில் தமிழை வளர்த்தெடுக்கப் பார்க்கும் தனக்கு மத்திய அரசாங்கம் துணை செய்ய வேண்டும் எனப் புதுப் பந்தி விரிக்கும் விவரமற்ற அந்த தம்பிக்கு ஒன்று சொல்வேன். 

உங்களுக்கு தெரிந்தது என்ன ? 0 1 எனும் பைனரி மட்டும்தானே ? அந்த பைனரி ஃபார்முலாக்குள் அறிவியல் அடங்கலாம். மொழி அடங்காது.

ஒவ்வொரு மொழிக்கும் தனித்த குணமும் – ரிதமும் உண்டு. அதுபோக இலக்கணம் + இலக்கியம் ஆகிய இரண்டுக்கும் இடையேயான பெரும் போராட்டமும் உண்டு. எழுத எழுதத்தான் அது குறித்து உணர முடியும். 

அப்படி உணர்ந்த ஒருவரே அந்த மொழி குறித்த இறுதி முடிவை எடுக்க முடியும். அந்த முடிவுதான் ஒரு மொழியை மேலும் வளர்க்கும். எதிர்கால சமூகத்துக்கு பலனளிக்கும்.

இப்படியான எந்த பயிற்சியும் இல்லாத உங்களைப் போன்ற ஒருவர் எந்த பல்கலைக்கழகப் பாடத் திட்டத்துக்குள் இருந்தாலும் அது பாழ்படும் என்பது நிச்சயம். ஆம், மொழிக்கும் பைனரிக்கும் சம்பந்தம் இருக்கவே முடியாது. மன்னிக்கவும், இதற்கு மேல் ஒரு வியாபாரிக்கு ஓஸியில் பாடமெடுக்க முடியாது.

*******

அண்ணாவையே இப்படி சொல்லி விட்டாரே எனப் பொறுமும் நண்பர்களே கொஞ்சம் பொறுங்கள்… 

அந்தத் தற்குறியின் அபத்தத்தை மேலும் கேளுங்கள்…

யாமறிந்த மொழிகளிலே 

தமிழ் மொழி போல் இனிதாவது 

எங்கும் காணோம் 

என்ற பாரதியே பிழைபட்டு நிற்கிறானாம். 

தமிழை அளவுக்கு அதிகமாக பாரதி வழிமொழிந்து விட்டானாம். 

அதனைக் கண்டு கொண்டது அந்த பதிப்பாளரின் அறிவியல் மூளையாம். 

அறிவியல் தமிழை வளர்த்தெடுப்பதே அந்தப் ப்ரகிருதியின் லட்சியமாம். அது தமிழில் இல்லையாம். அடக்கண்றாவியே… இந்த பைனரி குல வியாபாரியை எந்த கோயிலில் வைத்து மந்திரித்து தேற்றுவது ?

சித்தர்கள் பாடல்களில் இல்லாத அறிவியலா? அந்தப் பேருண்மைகளை நவீன அறிவியலின் கோட்பாட்டோடு இணைத்துக் ஆஹாவென வெளிக் கொணர்ந்திருக்க முடியுமே. அப்படியாக அந்தப் பதிப்பகம் ஏதேனும் நொட்டியிருந்தால் உலகம் வாழ்த்தி இருக்குமே. இல்லையே ! 

காமராஜர் அரங்கில் அந்தப் பதிப்பகம் அடித்த குட்டிக்கரணக் கூத்துகள் எல்லாம் அறிவியல் தமிழ் வளர்க்கத்தானா ? நாண வேண்டாமா ? 

*******    

Ettaegaal latchaname shriram sharma

தம்பி, கேள் 

அண்ணா என்பவர் ஓர் சகாப்தம். 

தமிழ் மண்ணில் அரசியலாடும் இரு பெரும் கழகங்களுக்கு அவரே ஆதி மூலம். இரண்டு கட்சி தொண்டர்களது மொத்த எண்ணிக்கையைக் கூட்டினால் அது மூன்று கோடியை எட்டிவிடும்.  

சாதி மத பேதமற்ற அரசியலை முன்னெடுத்த அண்ணாவின் அன்பை கட்சி சார்பற்று வழிமொழிவோரும் உண்டு. அவர்களையும் கூட்டினால் மொத்தமாய் அது நான்கு கோடியை எளிதில் எட்டி நிற்கும்.

சரி பாதிக்கு மேலான மக்களின் பேரபிமானத்தைக் கொண்ட பேராளனை – திராவிடத்தின் தலைமகனை – எங்கள் அண்ணாவை 

பந்திக்கு அலைவோரெல்லாம் கிண்டிப் பார்க்க முனைந்தால் அடுத்த அடி அந்த ட்வீட்டைவிட கொச்சையாக இருக்கும். 

*******

குறுக்கு வழியில் புகழை – பதவியை கொண்டு விட முனைவோர்க்கு ஒன்று சொல்வேன்…

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி – தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இருவரின் வரலாற்று உழைப்பை உள்வாங்கப் பழகுங்கள்.

பொறுமையாக இருந்து உயர முனையுங்கள்.

அன்றந்த நாளில் பொட்டல் காட்டில் ஓப்பன் அம்பாஸிடர் காரில் ஊர்ப் புழுதியை எல்லாம் உள்வாங்கிக் கொண்டு கிராமம் கிராமமாக அலைந்து – 

கல்யாணம், காது குத்து, கருமாதி என ஓடோடித் தொண்டர்களை அரவணைத்து – 

நாள் ஒன்றுக்கு மூன்று – நான்கு கூட்டங்கள் என சோறு மறந்து பேசிப் பேசி கொள்கை வளர்த்த பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற பெரும் தலைவர்களை எண்ணிப் பாருங்கள். 

Ettaegaal latchaname shriram sharma

அவர்களிடமிருந்த FOCUS ல் குறைந்தது பத்து சதவிகிதமேனும் நம்மிடம் உண்டா என எடை போடுங்கள். பிறகு, அந்தப் பாழும் ட்வீட்டை நிரடுங்கள். 

எழுத எழுத ஆதங்கம் குறைந்து போகிறதுதான் என்றாலும்…

திடுக்கென மனதில் எழுந்து நிற்கிறதே ஔவை பெருமாட்டியின் அந்த ஈற்றடி…

ஆரையடா சொன்னாய் அது ?

கட்டுரையாளர் குறிப்பு:

Ettaegaal latchaname shriram sharma
வே.ஸ்ரீராம் சர்மா

எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

அண்ணா ஒரு குழந்தை !- ஸ்ரீராம் சர்மா

+1
0
+1
0
+1
0
+1
8
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *