“ஆகஸ்ட் 15 அன்று ஏற்றப்பட்ட தேசியக் கொடிகள் பல இடங்களில் கிழிந்தும், மோசமான நிலையிலும் தொங்கிக் கொண்டிருப்பதை உடனடியாக சரி செய்ய வேண்டும்”என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏவுமான ஈ.ஆர்.ஈஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை மத்திய அரசு அமுத பெருவிழாவாக கொண்டாடியது.
இதற்காக, தேசியக்கொடி விதிமுறைகளில் மத்திய அரசு சில மாற்றங்களை செய்தது.
கைத்தறி பருத்தி துணியால் மட்டுமே தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டும் என்ற விதி இருந்த நிலையில்,
இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பாலிஸ்டர், காட்டன், கம்பளி, பட்டு போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடிகளையும் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்ததுடன்,
அதை, வீட்டின் வாசல்களில் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதிவரை ஏற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது.
எம்.எல்.ஏ. ஈ.ஆர்.ஈஸ்வரன் வேண்டுகோள்!
இதையொட்டி எல்லாரும் தேசியக்கொடியை தங்கள் வீடுகளில் ஏற்றிவைத்து நாட்டுக்குப் பெருமை சேர்த்தனர்.
இந்த நிலையில் சுதந்திர தினம் முடிந்து இன்னும் சில வீடுகள் மற்றும் கடைகளில் தேசியக்கொடி இறக்கப்படாமல் இருக்கிறது.
இது தவிர, பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தேசியக்கொடிகளும் ஆங்காங்கே கிடக்கின்றன.
இதைப் பார்க்கும் பலரும் வேதனை தெரிவித்துவருகின்றனர். இதையடுத்தே எம்.எல்.ஏ. ஈ.ஆர்.ஈஸ்வரனும் தேசியக்கொடி அவமதிக்கப்படுவது உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் இன்று (ஆகஸ்ட் 19) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சுதந்திரத்தை முன்னிட்டு பெரும்பாலான இடங்களில் கட்டப்பட்ட தேசியக் கொடிகள் இறக்கப்படவில்லை.
பல இடங்களில் யாரும் கண்டுகொள்ளாமல் கிழிந்துபோய் கிடப்பதும், சேற்றிலே கிடப்பதும் பார்ப்பதற்கு வேதனையாக இருக்கிறது.
இந்திய தேசத்தினுடைய தேசியக் கொடியைப் பறக்கவிடுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் அதை திரும்ப எடுத்து மரியாதையோடு வைப்பது.
தேசியக்கொடிக்கு உரிய மரியாதையை கொடுப்பதற்காகத்தான் எல்லா இடங்களிலும் எப்போதும் கட்டிப் பறக்கவிடுவதற்கு அனுமதி கொடுப்பது கிடையாது.
இன்னும் தொடர்ந்து பல இடங்களில் தேசியக்கொடி அவமதிக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
அரசாங்கமும், அதிகாரிகளும் உரிய கவனத்தை செலுத்தி தக்க உத்தரவுகளை பிறப்பித்து அலங்கோலமாக ஆங்காங்கே கிடக்கின்ற தேசிய கொடிகளை உடனடியாக எடுத்து பாதுகாக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
தேசியக் கொடி : செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்!