வைஃபை ஆன் செய்யப்பட்டதும் ஈரோட்டில் இருந்து சில போட்டோக்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துவிட்டு தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒட்டி அங்கே பெரும்பான்மையாக இருக்கும் முதலியார் சமுதாய வாக்குகளை கவர்வதற்கான அரசியல் நகர்வுகள் தொடர்ந்து நடக்கின்றன.
கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத் தலைவர் கே. பி. கே. செல்வராஜை திருப்பூர் சென்று அமைச்சர்கள் ஈரோடு முத்துசாமி, வெள்ளக்கோவில் சாமிநாதன் மற்றும் தாமோ அன்பரசன் ஆகியோர் சந்தித்தனர். செங்குந்தர் மகாஜன சங்கத்தின் ஆதரவை திமுக கூட்டணியில் நிற்கும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு அவர்கள் கேட்டனர்.
இதையடுத்து பிப்ரவரி 9ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் மருமகனான சபரீசன் ஈரோட்டில் தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத் தலைவர்களை சந்தித்தார். அப்போது அவர்களிடையே பேசப்பட்டது என்ன என்பது குறித்து மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் ஏற்கனவே விரிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
சபரீசன் முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் அவர் ஈரோட்டுக்குச் சென்று முதலியார் சங்க பிரமுகர்களிடம் திமுக கூட்டணிக்கு ஆதரவு கேட்டு திரும்பினார். இதையடுத்து இந்த திசையில் அடுத்தடுத்த நகர்வுகள் அரங்கேறின.
சில நாட்கள் கழித்து ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற சீமான், ‘சபரீசன் சொல்லிவிட்டால் இங்க இருக்கும் முதலியார்கள் கேட்டு விடுவார்களா? என்ற கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தில் இருக்கும் அதிமுக பிரமுகர்கள் மூலமாக சைலன்டாக தனது வேலையை தொடங்கினார் எடப்பாடி பழனிச்சாமி. தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தில் இருக்கும் நந்தகோபால் அதிமுகவின் மாவட்ட மாணவரணி இணைச் செயலாளராக இருக்கிறார்.
இவர் தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தின் ஈரோடு மாவட்ட செயலாளர் ஆன ஆசை தம்பிக்கு நெருக்கமானவர். சபரீசனை ஆசைத்தம்பி சென்று சந்தித்து விட்டு திரும்பிய நிலையில் நந்தகோபால் சென்று ஆசை தம்பியை சந்திக்கிறார். அதன் அடிப்படையில் அதிமுக வேட்பாளர் தென்னரசு ஆசைத்தம்பி வீட்டுக்கே சென்றார்.
அடுத்த கட்டமாக பிப்ரவரி 17ஆம் தேதி அதிமுகவின் தேர்தல் பொறுப்பாளர் செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரோடு தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தின் ஈரோடு மாவட்ட செயலாளரான ஆசைத்தம்பியின் வீட்டுக்கு சென்றார்.
அப்போது வேலுமணி ஆசைத்தம்பியிடம் சில டீல்களை முன் வைத்ததாக கூறப்படுகிறது. பன்னீர்செல்வம் பூங்காவில் திருப்பூர் குமரனுக்கு சிலை, ஈரோட்டிலேயே திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் உள்ளிட்ட திட்ட பணிகளுக்கான செலவை அதிமுக சார்பில் செங்குந்தர் சங்கத்திடம் கொடுத்து விடுகிறோம். நீங்கள் அந்தப் பணிகளை அரசிடம் முறைப்படி தெரிவித்து விட்டு முன்னெடுத்துச் செல்லுங்கள்’ என்று வேலுமணி கூறி இருக்கிறார்.
இந்த நிலையில் தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்திலேயே திமுகவுக்கு ஆதரவு, அதிமுகவுக்கு ஆதரவு என்று இரண்டு கோஷ்டிகள் உருவாகிவிட்டன.
சபரீசனின் வேண்டுகோளின் படி தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தின் மாநில தலைவர் கே பி கே செல்வராஜ் திமுக கூட்டணிக்காக ஈரோட்டுக்கு பிரச்சாரத்துக்கு வர இருக்கிறார்.
அப்போது இதே சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் அவருடன் வருவார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனெனில் ஆசைத்தம்பி தரப்பில் சிலர் அதிமுகவோடு நல்ல தொடர்பில் இருக்கிறார்கள்.
மாநிலத் தலைவர் கே. பி. கே.செல்வராஜ் சட்ட விதிகளுக்கு முரணாக அனைத்து நிர்வாகிகளையும் ஆலோசிக்காமல் திமுக கூட்டணிக்கு ஆதரவளித்து விட்டார் என்றும்… ஈரோட்டில் செங்குந்தர் மகாஜன சங்க நிர்வாகிகளை கூட்டி கருத்து கேட்டு முடிவு எடுப்போம் என்றும் ஆசைத் தம்பி தரப்பினர் கூறி வருகிறார்கள்.
இதற்கிடையே நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா செங்குந்தர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவரும் தன் பங்குக்கு உறவு ரீதியான இந்த வாக்குகளை குறி வைத்து இருக்கிறார்.
சபரீசன் தொடங்கிய சாதி யூகத்துக்கு வேலுமணி மூலம் காஸ்ட்லியான செக் வைத்திருக்கிறார் எடப்பாடி என்கிறார்கள் அதிமுக தரப்பில்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
திமுக அரசை கண்டித்து அண்ணாமலை உண்ணாவிரத போராட்டம்!
“நல்லா பண்றீங்க தம்பீ…”- பிடிஆரை பாராட்டிய அழகிரி