ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலின்படி 77 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். இதையடுத்து முக்கிய கட்சிகளின் தலைவர்கள் இடைத் தேர்தல் பிரசாரத்தில் களத்தில் இறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிப்ரவரி 9 ஆம் தேதி பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பிப்ரவரி 24 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி வருகிற 15,16,17 மற்றும் 24,25 தேதிகளில் பிரச்சார வேனில் வீதி வீதியாக சென்று வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 19 ஆம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அக்கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் ஈரோடு-கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின், காங்கிரஸ் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து வரும் 19-02-2023, ஞாயிறன்று ஈரோட்டில் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஈரோடு காந்தி சிலை கருங்கல்பாளையத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கும் கமல்ஹாசன், 5.30க்கு சூரம்பட்டி நால் ரோடு, 6 மணிக்கு சம்பத் நகர், 6.30க்கு வீரப்பன் சத்திரம் என பிரச்சாரம் செய்து அக்ரஹாரத்தில் இரவு 7 மணிக்கு கலந்துகொண்டு பரப்புரையை முடிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஏ.எம்..ஆர்.ராஜ்குமார் 10 ஆயிரத்து ஐந்து வாக்குகள் பெற்று கவனிக்க வைத்தார். ஈரோடு கிழக்கு தொகுதி நகர்ப்புறம் அதிகமாக உள்ளது என்பதால், கமல்ஹாசனுக்கு இந்தத் தொகுதியில் கணிசமான வாக்குகள் விழுந்தன.
இந்த சூழலில் காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ அதாவது இந்திய ஒற்றுமைப் பயணத்தில் கலந்துகொண்ட கமல்ஹாசன் அதன் பின் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்தார். இதன் மூலம் திமுக கூட்டணியில் ஒரு கட்சியின் எண்ணிக்கை கூடியிருப்பதாக கருதப்பட்டது.’
இந்தநிலையில் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற செயல் வீரர்கள் கூட்டம் ஈரோடு பிளாட்டினம் மஹாலில் நடைபெற்றது.
ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான முத்துச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்,
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேரசிரியர் காதர்மொகைதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுசெயலாளர் ஈஸ்வரன், ஆதி தமிழர் பேரவை தலைவர் அதியமான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுக கூட்டணியின் அனைத்து தலைவர்களும் கலந்துகொள்வதால் அந்த வகையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் இதில் பங்கேற்குமாறு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால், திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் இதில் பங்கேற்காத நிலையில் கமல்ஹாசன் தனது சார்பாக மக்கள் நீதி மைய தேர்தல் பொறுப்பாளர் அருணாச்சலத்தை அனுப்பி வைத்திருந்தார். விரைவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களோடு கமல் கலந்து கொள்வார் என்றும் அப்போது திமுகவினர் தெரிவித்தனர்.
இந்த பின்னணியில் தான் இன்று மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிவிப்பில் பிப்ரவரி 19 ஆம் தேதி கமல் தேர்தல் பிரச்சாரம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ளும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதா என்று மக்கள் நீதி மய்யத்தின் மாநில நிர்வாகிகளிடம் கேட்டோம்.
”19 ஆம் தேதி பிரச்சாரத்தில் கூட்டணியினரோடு தான் கமல் கலந்துகொள்கிறார். வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுடன் அவர் வாக்கு சேகரிப்பார். இப்போதைக்கு இந்த 19 ஆம் தேதி பிரச்சாரம் மட்டும்தான் கமல்ஹாசனின் நிகழ்ச்சி நிரலாக திட்டமிடப்பட்டுள்ளது. வேறு எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை” என்றனர்.
–வேந்தன்
முதல் டெஸ்ட் போட்டி : இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா
பொள்ளாச்சி வழக்கு: எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை?