ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 74.79 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன.
இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக ஸ்ட்ராங் ரூமுக்கு எடுத்து செல்லப்பட்டு பூட்டி வைக்கப்பட்டது. இந்த சூழலில் இன்று (மார்ச் 2) காலை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு அந்த மையத்துக்குள் முகவர்கள் வேட்பாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அதிமுக வேட்பாளரான தென்னரசு வாக்கு எண்ணும் மையமான சித்தோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு முதல் ஆளாக வருகை தந்தார். அதுபோன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனும் வருகை தந்தார்.
வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்த தேர்தல் நடத்தும் அலுவலரான சிவகுமார் அங்கு நடைபெற்று வரும் ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
ஸ்ட்ராங் ரூம் திறக்கப்பட்டு வாக்கு இயந்திரங்கள் எல்லாம் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டுவரப்பட்டன.
வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு 750 க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மையத்துக்குள் வரும் பணியாளர்கள் அரசியல் கட்சி முகவர்களை தீவிர சோதனைக்கு பிறகே போலீசார் உள்ளே அனுமதித்தனர்.
இந்த சூழலில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. 397 தபால் ஓட்டுகள் பதிவாகியிருந்தன. 16 மேஜைகளில் 15 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, நாம் தமிழர் சார்பில் மேனகா நவனீதன், தேமுதிக சார்பில் ஆனந்த் என 4 பேர் களத்தில் உள்ளனர். இவர்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.
பிரியா
இடைத்தேர்தல்: சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை!
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் பணி!