ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த அதிமுக பிரமுகர் செந்தில் முருகனை, கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்வதாக எடப்பாடி பழனிசாமி இன்று (ஜனவரி 19) அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஈவிகேஸ் இளங்கோவன் மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 10 ஆம் தேதி முதல் தொடங்கிய வேட்புமனு தாக்கல் 17 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
திமுக, நாதக உள்பட 58 வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்த நிலையில், 55 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. அவற்றில் அதிமுக பிரமுகரான செந்தில் முருகன் வேட்பு மனுவும் ஏற்கப்பட்டது.
இதனையடுத்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவின் ஆதரவு தனக்கு உண்டு என தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நாங்கள் புறக்கணிக்கவில்லை. ஓட்டளிப்போம். ஆனால் யாருக்கு என்பது ரகசியம்” என தெரிவித்திருந்தார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக ஏற்கெனவே அறிவித்த நிலையில், அதிமுக பிரமுகர் சுயேட்சையாக களமிறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கட்டுப்பாட்டை மீறி, தலைமை எடுத்த முடிவிற்கு மாறாக, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு, கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், செந்தில் முருகன் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சித் தொண்டர்கள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த செந்தில் முருகன்?
ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா மறைவையடுத்து கடந்த 2023ல் இடைத்தேர்தல் நடைபெற்றது.
அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணியின் சார்பில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், ஓ.பன்னீர்செல்வம் தனது அணியின் வேட்பாளராக செந்தில் முருகனை அறிவித்தார்.
பின்னர், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வேண்டுகோளை ஏற்று, செந்தில் முருகன் போட்டியிலிருந்து வாபஸ் பெறுவார் என்று அறிவித்தார் பன்னீர்செல்வம்.
அப்போது இடைத்தேர்தல் முடிந்ததும், செந்தில் முருகன் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தார். அவருக்கு அதிமுகவில் ஈரோடு மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணை செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தான் தற்போது செந்தில் முருகன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். அவரது வேட்பு மனுவும் ஏற்கப்பட்டது.
அவர் வேட்பு மனுவை வாபஸ் பெற வேண்டும் என அதிமுக தலைமையில் இருந்து அறிவுறுத்தியது. ஆனால், தான் போட்டியிடுவதில் செந்தில் முருகன் உறுதியாக உள்ளதால் அவரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
- இங்கிலாந்தை ஒயிட் வாஷ் செய்த இந்திய அணி!
- டிஜிட்டல் திண்ணை: வலை வீசும் பழைய பாசம்… சிக்குவாரா செங்கோட்டையன்? சிக்கலில் எடப்பாடி
- என்ன கொடும சரவணன் இது? : அப்டேட் குமாரு
- பெண் குழந்தைகள் பற்றி சிரஞ்சீவி பேசியது என்ன? நெட்டிசன்கள் காட்டமாக என்ன காரணம்?
- ”என்னை சோதிக்காதீர்கள்” எடப்பாடி பெயரை உச்சரிக்காத செங்கோட்டையன்