ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஜனவரி 14) அறிவித்துள்ளார்.
வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் இதுவரை திமுக வேட்பாளர் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன. இந்தநிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுவதாக சீமான் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற 05-02-2025 அன்று, தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக என் அன்புத்தங்கை மா.கி.சீதாலட்சுமி (முதுகலை ஆய்வியல் நிறைஞர் (M.A, M.Phil.,) போட்டியிடவிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

யார் இவர்?
ஆளும் கட்சியை நம்பிக்கையுடன் எதிர்த்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான சீதாலட்சுமி தேர்தல் களத்திற்கு புதியவரல்ல. இவர் ஏற்கெனவே கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் திருப்பூரிலும், 2021 சட்டமன்ற தேர்தலில் கோபிச்செட்டிபாளையம் தொகுதியிலும் போட்டியிட்டு டெபாசிட்டை இழந்தார்.
2019ல் நடந்த மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டார். அதில் 39,010 வாக்குகள் பெற்று டெபாசிட்டை இழந்தார்.
ஈரோடு மாவட்டம் ஓடத்துறை ஊராட்சிக்கு உட்பட்ட மாரப்பம்பாளையத்தை சேர்ந்தவர். வயது 49.
இவரது பெற்றோர் ம.கிருஷ்ணன் மற்றும் காந்திமதி. கணவர் இரா.செழியன் முகலை பொறியியல் படித்தவர்.
கோபி கலைக் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் பட்டம் பெற்றவர், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆய்வியல் பட்டம் பெற்றுள்ளார்.
கடந்த 2000 முதல் 2013 வரை 13 ஆண்டுகாலம் ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது விவசாயம், கேபிள் டிவி ஆபரேட்டர் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கோவை பீப் கடை விவகாரம்: பாஜக அலுவலகம் மீது வீசப்பட்ட மாட்டுக்கறி!