டிஜிட்டல் திண்ணை: ஒரு லட்சம் ஓட்டுகள்… எடப்பாடி- செங்கோட்டையன் மாஸ்டர் பிளான்! 

அரசியல்

 வைஃபை ஆன் செய்ததும் இடைத் தேர்தல் பற்றி அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் நடத்திய ஆலோசனைக் கூட்ட போட்டோக்கள்  டெலிகிராமில் வந்தன. அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தொடர்பாக சேலத்தில் தொடர் ஆலோசனை நடத்தி 106+5 என 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நியமித்த எடப்பாடி பழனிசாமி நேற்றும், இன்றும் ஈரோட்டுக்கு வந்து அடுத்த கட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியிருக்கிறார்.  ஜனவரி 26 ஆம் தேதி வில்லரசம்பட்டியிலும்.  ஜனவரி 27 ஆம் தேதி ஆலய மஹாலிலும் கூட்டங்களை நடத்தியிருக்கிறார் எடப்பாடி.  இந்த கூட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் செங்கோட்டையன் தலைமையில் 111 பேரும் மற்ற லோக்கல் நிர்வாகிகளும் கலந்துகொண்டிருக்கிறார்கள்.  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி இல்லை.

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட  33 வார்டுகள் இருக்கின்றன. முழுக்க முழுக்க நகரப் பகுதியையே கொண்ட தொகுதி இது.  அதிமுகவில்  ஏற்கனவே நியமிக்கப்பட்ட தேர்தல் பணிக் குழு உறுப்பினர்கள் 111 பேர்,  பிறகு அறிவிக்கப்பட்ட 6 பேர் என மொத்தம் 117   நிர்வாகிகளுக்கும் இந்த 33 வார்டுகள் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.  இந்த 117 பேரில் ஒவ்வொருவரின் கீழும்  அவரவர் மாவட்டங்களைச் சேர்ந்த நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் என இருபது பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு குழுவும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பூத்துகளில் லோக்கல் நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். 

இதையெல்லாம் விவரித்த எடப்பாடி, ‘அதாவது  தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று தினந்தோறும் அந்த வீட்டில் இருக்கும் மக்களை சந்திக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரம் முடியும்  நாள்  வரை இந்த சந்திப்பு தொடர வேண்டும்.  திமுக கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில்  பெரும்பாலானவற்றை நிறைவேற்றவில்லை. இது குறித்து துண்டுப் பிரசுரங்கள்  அச்சிட்டு கொடுக்கப்படும்.  உங்களுக்கென ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று அவற்றை வழங்குங்கள். லோக்கல் நிர்வாகிகளோடு போய் அங்கே திமுக அரசு சொன்ன எதையும் செய்யவில்லை என்பதை எடுத்துச் சொல்லுங்கள். தினமும் அவர்களை போய் பாருங்கள். ஒரு வாரத்தில் அவர்கள் யாருக்கு ஓட்டுப் போடப் போகிறார்கள் என்பதை நாம் ஓரளவுக்கு கணித்துவிடலாம். அதன்பிறகு அடுத்தடுத்த முயற்சிகளைத் தொடரலாம்.  

நம் எதிரி வேலைகளை ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. ஆனா நாம் இன்னும் பண்ணாத இருக்கிறோம். ஈரோட்டில் கிழக்கு தொகுதிக்கு திமுக எதையும் கிள்ளிக் கூட போடக் கெடையாது. இந்த மாவட்டத்துலயே எல்லா திட்டங்களையும் செஞ்சது நம்மதான்.   அதனால் தைரியமாக மக்களிடம் சென்று பேசுங்கள்’ என்று பேசிய எடப்பாடி பழனிசாமி,  செங்கோட்டையனை சுட்டிக் காட்டி, ‘அண்ணன் பழுத்த தேர்தல் அனுபவம் மிக்கவர். அண்ணன் சொல்படி எல்லாரும் நடக்க வேண்டும்’ என்றும் சொல்லி செங்கோட்டையனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோளும் வைத்திருக்கிறார் எடப்பாடி

 ஈரோடு கிழக்கு தொகுதி கணிசமான முதலியார் சமுதாய வாக்குகள் கொண்டது. முதலியார் சமுதாய முக்கியப் புள்ளிகளோடு  கடந்த முப்பது ஆண்டுகளாக நெருங்கிய தொடர்புள்ளவர் செங்கோட்டையன். அதனால்தான் இந்த இடைத் தேர்தலில் முழுக்க முழுக்க செங்கோட்டையனின் வியூகத்தில் விட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

இந்த இடைத் தேர்தலில்  எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் மொத்தமுள்ள 2 லட்சத்து சொச்சம் வாக்குகளில்  ஒரு லட்சம் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதுதான் எடப்பாடி- செங்கோட்டையனின் திட்டம். இதை முன்னிட்டுதான் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் திமுகவுக்கு இணையாக தேர்தல் பணிக்குழுவை கணக்கு போட்டு அமைத்துள்ளனர்.  

திமுக எவ்வளவு கொடுக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டு அதற்கு இணையாகவோ அல்லது அதை விட கொஞ்சம் அதிகமாகவோ தேர்தல் நெருக்கத்தில் கொடுப்பதற்கும் தேவையான ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறார் எடப்பாடி” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

”ஆண் பெண் வித்தியாசம் இல்லையா ஐஸ்வர்யா?”: சின்மயி பதிலடி!

தடையை மீறி சென்னை பல்கலை.யில் பிபிசி ஆவணப்படத்தை திரையிட்ட எஸ்எஃப்ஐ

+1
1
+1
3
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *