ஈரோடு கிழக்கு நாதக வேட்பாளர்: ஆசிரியர் டூ அரசியல் – யார் இந்த சீதாலட்சுமி?

Published On:

| By Kavi

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களமிறங்கியுள்ள சீதாலட்சுமி யார் என்பதை இந்த செய்திக்குறிப்பில் பார்க்கலாம்.

காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலை எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் புறக்கணித்ததால் திமுக – நாம் தமிழர் கட்சி இடையே இருமுனை போட்டி நிலவுகிறது.

ஆளும் கட்சியான திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகிறார்.

யார் இவர்?

ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா ஒடத்துறை அருகே மாரப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி(50). தந்தை பெயர் ராமகிருஷ்ணன், தாய் பெயர் காந்திமதி. விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர்.

கோபி கலைக் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் மற்றும் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆய்வியல் பட்டம் பெற்றவர். 1999ல் பாரதியார் பல்கலைக் கழகத்தில் எம்.பில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார்.

சீதாலட்சுமி ஈரோடு நவரசம் என்ற தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். சுமார் 13 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிய இவர், தற்போது விவசாயம், கேபிள் டிவி ஆபரேட்டர் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

சீதாலட்சுமியின் கணவர் செழியன். இவர், நாம் தமிழர் கட்சியின் ஈரோடு ஒருகிணைந்த மாவட்ட செயலாளராக இருந்தார். தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு இசைமதி என்ற 7 வயது மகள் உள்ளார்.

2009ல் ஈழ பிரச்சினை உச்சத்தில் இருந்தபோது, சீமான் ஈழ தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுத்தது சீதாலட்சுமியை ஈர்த்துள்ளது. இதனால் நாம் தமிழர் கட்சி உருவானதில் இருந்தே சீதாலட்சுமியும், அவரது கணவரும் கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

தற்போது சீதாலட்சுமி மாநில மகளிர் அணியின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

முதன்முறையாக 2016 சட்டமன்றத் தேர்தலில் பாவனி தொகுதியில் போட்டியிட்டார் சீதாலட்சுமி. 2019ல் ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார்.

2021 சட்டமன்றத் தொகுதியில் கோபி தொகுதியில் போட்டியிட்டார். 2024- ஆம் ஆண்டு திருப்பூா் மக்களவைத் தொகுதியிலும் போட்டியிட்டு 95,726 வாக்குகள் பெற்று நான்காம் இடம் பிடித்தார்.

இந்த 4 தேர்தலிலும் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் தொடர்ந்து 5ஆவது முறையாக விடா முயற்சியாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களம் காண்கிறார்.

இவருக்கு ரூ.31,52,179 மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.7,50,000 மதிப்பில் அசையா சொத்துகளும் உள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
வேட்புமனுவில் கொடுத்துள்ள தகவல்படி இவர் மீது 2 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஈரோடு கிழக்குத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சீதாலட்சுமி கூறுகையில், “இந்த தேர்தலில் திமுக அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது. தற்போது எனது உறவுகள் 8 பேர் மீது எந்த காரணமும் இன்றி வழக்கு போட்டுள்ளனர். நாங்கள் சட்டத்தின்படி செயல்படுகிறோம். உண்மையும் நேர்மையும் கொண்ட ஒரு பெண்ணாக இந்த தேர்தலில் நிற்கிறேன். பெண்கள் அரசியலுக்கு கட்டாயமாக வரவேண்டும். அதைதான் நாம் தமிழர் செய்துகொண்டிருக்கிறது” என தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வணங்காமுடி

மகனை பிடித்து கொண்டு 1 கோடி பேரம் பேசிய கொள்ளையன்… சைஃப் தப்பித்தது எப்படி?

‘இந்தியாவை ரொம்பவே மிஸ் பண்றோம்’ – பாகிஸ்தானில் எழுந்த சோக குரல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel