ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று (பிப்ரவரி 24 ) டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரில் , ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு சேகரிக்க முடியாத நிலை உள்ளது. அங்கு நடைபெறும் முறைகேடுகள், ஆளும் கட்சியின் அராஜகங்கள் பற்றி எந்த புகார் கொடுத்தாலும் ஏற்க அதிகாரிகள் தயாராக இல்லை.
மக்களை மண்டபங்களில் அடைத்து வைத்து மற்ற வேட்பாளர்களை சந்திக்க விடாதபடி செய்கிறார்கள். ஆளுங்கட்சியான திமுகவினர் மற்றும் மாற்று கட்சியினர் பணம் விநியோகிப்பதை செய்தியாக வெளியிடும் ஊடகவியலாளர்களை தாக்குவதும் நடைபெறுகிறது. அங்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
ஆளும் கட்சியான திமுக விற்கு அங்குள்ள காவல்துறையினர் கைப்பாவையாக செயல்படுகின்றனர். அவர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.
இது தொடர்பாக ஏற்கனவே மாநில தேர்தல் அலுவலகத்தில் புகார் தெரிவித்து இருக்கிறோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“எடப்பாடியால் அனைவரையும் காசு கொடுத்து வாங்க முடியுமா?”: தினகரன் கேள்வி!