ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா இளம் வயதில் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா. இவர் தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வந்தார்.
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு திருமகன் ஈவெரா வெற்றி பெற்று முதல் முறையாக எம்எல்ஏவானார்.

நேற்று முன்தினம் சென்னையில் இருந்து ஈரோடு வந்த திருமகனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து ஈரோட்டில் உள்ள கே.எம்.சி.ஜி.எச் என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இன்று காலை முதல் அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், மதியம் சுமார் 12.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி எம்எல்ஏ திருமகன் ஈவெரா உயிரிழந்தார். இவருக்கு வயது 46.
இதையடுத்து கட்சியினர் மற்றும் பொதுமக்களின் அஞ்சலி செலுத்துவதற்காக ஈரோடு கச்சேரி சாலையில் உள்ள இல்லத்தில் திருமகன் ஈவெரா உடல் வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அங்கு குவிந்துள்ளனர்.
இறந்த எம்எல்ஏ திருமகன் ஈவெரா, பி.ஏ. பொருளாதாரம் படித்துள்ளார். இவருக்கு பூர்ணிமா என்ற மனைவியும், சமனா ஈவெரா என்ற மகளும் உள்ளார்.

கடந்த 2000ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இருந்து வந்தார். 2006–2010ம் ஆண்டு வரை இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளராகவும், 2014-2017 வரை தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதள பிரிவு தலைவராகவும் இருந்தார்.
மகன் இறந்த செய்தி அறிந்து சென்னையில் இருந்து அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோடு சென்று கொண்டுள்ளார். எம்எல்ஏ திருமகன் ஈவெரா இறந்த தகவல் காங்கிரஸ் கட்சியினரிடையே மட்டுமல்லாது பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கலை.ரா
”எங்கிருந்தாலும் வாழ்க” காயத்ரியை வாழ்த்திய அண்ணாமலை
எலான் மஸ்க்கிற்கு கோரிக்கை வைத்த அமெரிக்கா