ஈரோடு கிழக்கு: மின்னம்பலம் வாக்கு கணிப்பு! 

அரசியல்

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை ஒட்டி மின்னம்பலம் சார்பில் அத்தொகுதியில் மக்கள் மன நிலையை அறிய சர்வே எடுத்து வெளியிட்டிருந்தோம். இடைத் தேர்தலில்  74.79% மக்கள் வாக்களித்தனர். 

மக்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்ற கேள்விக்கான ‘எக்சிட் போல்’ விடைக்காக மீண்டும் ஈரோடு கிழக்கில் களமிறங்கினோம்.

சர்வேக்காக மின்னம்பலம் குழுவினர் 1500 பேரை சந்தித்தோம், வாக்குப் பதிவு முடிந்ததும் அவர்களையே முதன்மையான நோக்கமாகக் கொண்டு களமிறங்கியதில்… அந்த 1500 பேரில் 900 பேரை மீண்டும் சந்திக்க முடிந்தது. அவர்களை மீண்டும் சந்தித்து யாருக்கு வாக்களித்தீர்கள் என்ற கேள்விக்கு விடை தேடினோம்.

அந்த வகையில் வாக்குப் பதிவுக்குப் பிறகு மக்கள் அளித்த பதிலின்படி

காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் – 70 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வாக்குகள் 

அதிமுக வேட்பாளர்  தென்னரசு                                 55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வாக்குகள்

நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதன்             13 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வாக்குகள்

தேமுதிக வேட்பாளர் ஆனந்த்                                        8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வாக்குகள்

வரையும் பெறலாம்,

மீதமுள்ள வாக்குகளை சுயேச்சைகள் பங்கு போடலாம் என்பதே நிலவரமாக இருக்கிறது.

தேர்தல் அன்று மின்னம்பலம் உணர்ந்தவை

வெளியூர் நிர்வாகிகள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் நிபந்தனையை திமுக, அதிமுக ஆகிய இரு தரப்பினரும் மீறிவிட்டனர். இரு கட்சிகளையும் சேர்ந்த முகம் அறியப்படாத பூத் பொறுப்பாளர்கள் தேர்தல் நாளன்றும் தத்தமது பகுதிகளிலேயே உள்ளூர் கட்சியினரின் வீடுகளில் தங்கியிருந்தனர்.

வெள்ளை வேட்டி சட்டை என்ற அரசியல்வாதிகளின் யூனிஃபார்மை தவிர்த்து கைலி, பர்முடாஸ் என்று அவர்கள் சுற்றித் திரிந்தனர்.

இதில் திமுகவினர்தான் தாங்கள் யார் யாருக்கு பணம் கொடுத்தார்களோ அவர்களை எல்லாம் சிந்தாமல் சிதறாமல் வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு போய் சேர்த்தனர்.

குறிப்பாக அருந்ததியர் குடியிருப்புகளைச் சேர்ந்த வாக்காளர்களை திமுகவினர் கொஞ்சமும் விடுபடாமல் வாக்களிக்க அழைத்துச் சென்றனர்.

பரிசுப் பொருட்கள் கொடுப்பதில் போட்டி போட்ட அமைச்சர்கள் தத்தமக்கு கொடுக்கப்பட்ட வார்டுகளில் அதிகபட்ச வாக்கு சதவிகிதம் பதிவாக வேண்டும் என்பதிலும் போட்டி போட்டிருக்கிறார்கள். தொகுதியில் இல்லாதபோதிலும் தங்களுக்கு கீழ் உள்ள பொறுப்பாளர்களைக் கொண்டு அதை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

பிப்ரவரி 27 ஆம் தேதி கடுமையான வெயில் காரணமாக பிற்பகலில் இலேசான மந்த நிலை ஏற்பட்டு பின் மாலையில் தீவிரமாகத் தொடங்கியது. அதனால்தான்  இரவு வரை வரிசையில் நின்று வாக்களித்தனர் மக்கள்.

2021 தேர்தலில் 66 சதவிகிதம் வாக்குப் பதிவு நடந்த ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்த இடைத் தேர்தலில் அதைவிட சுமார் பத்து சதவிகிதம் அதிகமாக வாக்குப் பதிவாகியுள்ளது குறிப்பிடத் தக்கது.

நாகாலாந்து : வெற்றி வாய்ப்பு யாருக்கு?

மேகாலயா தேர்தல்: வெற்றி வாய்ப்பு யாருக்கு?

Erode East Exit Poll
+1
1
+1
3
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *