எடப்பாடி பழனிசாமியையும், பன்னீர் செல்வத்தையும் இணைக்க முயற்சி நடப்பதாக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பாஜக நிலைபாடு குறித்து இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கிறது.
இந்நிலையில் டெல்லி சென்று வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (பிப்ரவரி 3) காலை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர் செல்வத்தையும் சந்தித்துப் பேசினார்.
அதைத்தொடர்ந்து பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, அண்ணாமலை உள்ளிட்டோர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது சி.டி.ரவி பேசுகையில், “1972ல் அதிமுக தொடங்கப்பட்ட போது எம்.ஜி.ஆர் திமுகவை தீயசக்தி என்று கூறினார். அது இன்றுவரை மாறவில்லை. ஜெயலலிதாவும் திமுகவைத் தீயசக்தி என்றே கூறினார்.
திமுக தனது செல்வாக்கைத் தினம் தினம் இழந்து வருகிறது. மக்களிடம் மிகப் பெரிய கெட்டப்பெயரை வாங்கியுள்ளது.
திமுக ஒரு குடும்பத்துக்காகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழக மக்களுக்கு எதிராக திமுக உள்ளது. சொத்து வரி, மின் கட்டணம், பால் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது.
கட்டப்பஞ்சாயத்து அதிகரித்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. இதெல்லாம் தமிழக மக்கள் திமுகவுக்கு எதிராக உள்ளனர் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
திமுக பண பலத்தைக் காட்டி அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது. இதை நாங்கள் ஈரோட்டில் பார்த்திருக்கிறோம்.
எனவே திமுகவை வீழ்த்த ஒன்றிணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஒன்றிணைந்த அதிமுக தேவைப்படுகிறது.
இன்றுகாலை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியையும் , முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தையும் சந்தித்தோம். அப்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாகவும், தமிழக பிரச்சினைகள் குறித்தும் பேசினோம்.
இது நல்லபடியான சந்திப்பாக இருந்தது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறிய சில தகவல்களைத் தெரிவித்தோம். தமிழ்நாட்டின் நலன் கருதியும், ஈரோடு கிழக்கில் திமுகவை வீழ்த்தவும் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினோம்.
நாங்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சிக்கிறோம். ஒன்றிணைந்த அதிமுகவை உருவாக்க முயன்று கொண்டிருக்கிறோம். பிப்ரவரி 7ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் உள்ளதால், பாஜகவின் நிலைப்பாட்டை அப்போது அறிவிப்போம்” என்றார்.
அவரைத்தொடர்ந்து பேசிய அண்ணாமலை, ஜே.பி.நட்டா அறிவுறுத்தலின் பேரில் சி.டி.ரவி இங்கு வந்துள்ளார் என்று குறிப்பிட்டார். மேலும், உறுதியான, நிலையான அதிமுக, தேசிய ஜனநாயக கூட்டணி தேவை.
எதிர்க்கட்சியாக தனி தனியாக நிற்காமல் ஒரே அணிகாக ஒரே வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதுதான் அகில இந்திய பாஜக தலைவரின் விருப்பம். திமுகவிற்கு எதிராக ஒரு வலிமையான பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.
பிரியா
“பாஜகவுடன் எச்சரிக்கையுடன் இருக்கிறோம்”: எடப்பாடி தரப்பு!
இடைத்தேர்தல்: ஓபிஎஸ் பணிமனையில் மோடி படம்!