ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (பிப்ரவரி 27) காலை 7 மணிக்கு தொடங்கியது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக கடந்த ஜனவரி 4ஆம்தேதி மரணமடைந்தார்.
இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27ஆம் தேதியான இன்று தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கை சின்னத்தில் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இவர்களோடு மொத்தம் 77பேர் ஈரோடு கிழக்கில் களம் காண்கின்றனர்.
இதையொட்டி கடந்த 20நாட்களுக்கும் மேலாக ஈரோடு கிழக்கில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர்.
அதிமுக வேட்பாளருக்கு அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர்.
தேமுதிக வேட்பாளருக்கு பிரேமலதா விஜயகாந்த், நாம் தமிழர் வேட்பாளருக்கு கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் வாக்கு சேகரித்தனர்.
தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலை 6மணியுடன் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து அந்த தொகுதியில் இருந்த மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் வெளியேறினர். இதனால் கடந்த 20நாட்களுக்கும் மேலாக விழாக்கோலம் பூண்டது போல் காணப்பட்ட ஈரோடு கிழக்கு வெறிச்சோடி காணப்பட்டது.
அதோடு தொகுதியில் சம்பந்தமில்லாதவர்கள் வெளியேறி விட்டார்களா என்று கண்காணிக்க 15 குழுக்கள் அமைக்கப்பட்டு ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அதுபோன்று பறக்கும் படையினரும் பண பட்டுவாடாவை தடுக்க சோதனையில் ஈடுபட்டனர். எனினும் பணம், பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு சம்பந்தப்பட்ட கட்சிகள் வழங்கின.
இந்த சூழலில் இன்று காலை மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது அதை தொடர்ந்து 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்களும் வாக்களிக்க வந்துகொண்டிருக்கின்றனர்.
ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 11ஆயிரத்து 25பேர் பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 16ஆயிரத்து 497பேர், திருநங்கைகள் 25பேர் என மொத்தம் 2லட்சத்து 27 ஆயிரத்து 547பேர் வாக்களிக்க உள்ளனர்.
இவர்கள் வாக்களிக்க ஏதுவாக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1,206 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வாக்கு சாவடிகளில் 32 வாக்கு சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு அங்கு துணை ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
77 வேட்பாளர்கள் உள்ளதால் ஒரு வாக்குச்சாவடிக்கு ஐந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஒரு கட்டுப்பாட்டு கருவியும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் விவிபேட் கருவியும் வைக்கப்பட்டுள்ளது.
பிரியா
வேலைவாய்ப்பு : தமிழ்நாடு மருத்துவத் துறையில் பணி!
உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்கும் டென்மார்க்