ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாஜக தனித்து களம் இறங்குமா அல்லது ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவிக்குமா என்று கேள்வி எழுந்தது.
இந்நிலையில் டெல்லி சென்று வந்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வத்தை சந்தித்துப் பேசினார் அண்ணாமலை.
இந்த சந்திப்பு குறித்து அவர் கூறுகையில், இருவரும் ஒன்றிணைய வேண்டும் என்று பாஜக விரும்புகிறது.
ஈரோடு இடைத்தேர்தலில் ஒரே அணியாக, உறுதியான நிலையான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று கூறினார்.
இதையடுத்து ஓ.பன்னீர் செல்வம் தங்கள் தரப்பு வேட்பாளரைத் திரும்பப் பெற்றார். அத்துடன் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற உழைப்போம் என ஓபிஎஸ் தரப்பு தெரிவித்தது.
இதற்காக ஓபிஎஸுக்கு நன்றி தெரிவித்து இன்று (பிப்ரவரி 7) அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் தென்னரசுவுக்கு பாஜக தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக சட்டப்பூர்வ அதிமுக வேட்பாளரை முன்னிறுத்தி இருக்கும் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் பொதுநலன் கருதி, கூட்டணி நன்மை கருதி தங்கள் வேட்பாளரை திரும்பப்பெற்றிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நன்றி.
திமுக அரசை வீழ்த்துவதற்காக ஓரணியில் திரண்டிருக்கும் நாம் அனைவரும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் தென்னரசுவின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும். பாஜக தொண்டர்கள் வெற்றிக்கு முழுமையாக உழைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரியா
“ஓபிஎஸ் இபிஎஸ் சந்திக்க வாய்ப்பே இல்லை”: ஜெயக்குமார்
செவிலியர்களிடம் மன்னிப்பு கேட்ட பாலகிருஷ்ணா