ஈரோடு கிழக்கு : நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சைகள்!

அரசியல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வரும் பிப்ரவரி 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 8ஆம் தேதி வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. வேட்புமனுவைத் திரும்பப் பெறக் கடைசி நாள் பிப்ரவரி 10ஆம் தேதி ஆகும்.

இந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் அணியினரோ, ஈபிஎஸ் அணியினரோ இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக தனது கருத்தை இன்னும் தெரிவிக்கவில்லை.

காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். அதுபோன்று தேமுதிக, அமமுக, நாதக வேட்பாளர்கள் விரைவில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று (ஜனவரி 31) 4 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.

காலை 11 மணிக்குத் தொடங்கிய வேட்புமனு தாக்கலில் முதல் வேட்புமனுவாகத் தேர்தல் மன்னன் பத்மராஜன் தாக்கல் செய்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தலாக இருந்தாலும் சரி, நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி முதல் ஆளாக வந்து வேட்புமனு தாக்கல் செய்பவர் பத்மராஜன்.

சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த இவர் ஒரு ஓமியோபதி மருத்துவர் ஆவார். 1988ஆம் ஆண்டு முதல் வேட்புமனுவைத் தாக்கல் செய்து வரும் பத்மராஜன் தற்போது 233ஆவது முறையாக மனு தாக்கல் செய்துள்ளார். 232ஆவது முறை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு எதிராகப் போட்டியிட்டார்.

அவரைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காந்தியவாதி ரமேஷ் 10 ரூபாய் நாணயங்களுடன் வந்து நூதன முறையில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

“இந்த தேர்தலில் மக்கள் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், 10 ரூபாய் நாணயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நாணயத்தைத் தராசுத் தட்டில் வைத்து எடுத்து வந்தேன்” என கூறினார்.

கோவை மாவட்டத்தை சேர்ந்த நூர் முகமது, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர பாண்டி உள்ளிட்ட சுயேட்சை வேட்பாளர்களும் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.

இந்த வேட்பு மனு தாக்கலை முன்னிட்டு ஈரோடு மாநகராட்சி சுற்றுவட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரியா

2047க்குள் பொற்கால இந்தியா: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

2047க்குள் பொற்கால இந்தியா: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *