ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் வேட்பு மனு பரிசீலனை முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியிட்டது.
வேட்பாளர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்பட்டு தலைவர்களின் பிரச்சாரத்தால் சூடாகியிருக்கிறது ஈரோடு.
இதன்படி இந்த இடைத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.விகே.எஸ். இளங்கோவன் கை சின்னத்தில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் ஆனந்த் முரசு சின்னத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா விவசாயி சின்னத்திலும் நிற்கிறார்கள்.
இவர்கள் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் இறுதி வேட்பாளர் பட்டியலின்படி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இதற்கான அறிவிப்பை பிப்ரவரி 10 ஆம் தேதி தேர்தல் அதிகாரி சிவக்குமார் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி பற்றிய சில முக்கியமான புள்ளி விவரங்களை இப்போது பார்க்கலாம்…
தொகுதியின் சமுதாய பிரதிநிதித்துவம்
ஒருங்கிணைந்த ஈரோடு சட்டசபை தொகுதியை பிரித்து, 2008ல், ‘ஈரோடு (கிழக்கு)’ தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. இத்தொகுதியின் மொத்த மக்கள் தொகையில் செங்குந்தர் கைக்கோல முதலியார் சமூகத்தினர் அதிகமானோர் அவர்களை அடுத்து கொங்கு வேளாளர் சமுதாயத்தினர் உள்ளனர்.
கொங்கு நாடார், அருந்ததியர், பிள்ளை, தேவேந்திர குல வேளாளர், சௌராஷ்டிரர், தேவாங்க செட்டியார், செட்டியார் ஆகிய சாதிகளை உள்ளடக்கியது ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி.
அதிகரித்துள்ள வாக்காளர் எண்ணிக்கை- குறைந்துள்ள வாக்குப் பதிவு சதவிகிதம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 பேர். இதில் ஆண்கள் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 பேர். பெண்கள் 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த தொகுதியில் 2011 இல் நடந்த தேர்தலில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 1 லட்சத்து 75 ஆயிரத்து 395 ஆகும், இவர்களில் ஆண்கள் 87 ஆயிரத்து 602 பேரும் பெண்கள் 87 ஆயிரத்து 786 பேரும் மூன்றாம் பாலினத்தார் 7 பேரும் என இருந்துள்ளது.
2016 தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 2 லட்சத்து 12 ஆயிரத்து 746 ஆக உயர்ந்தது. இவர்களில் ஆண்கள் 1 லட்சத்து 4 ஆயிரத்து 669 பேரும் பெண்கள் 1 லட்சத்து 8 ஆயிரத்து 72 பேருமாக இருந்தனர். மூன்றாம் பாலின வாக்காளர் எண்ணிக்கை 5 ஆக இருந்தது,
2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை மேலும் உயர்ந்து 2 லட்சத்து 28 ஆயிரத்து 425 ஆக இருந்தது. இவர்களில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 11 ஆயிரத்து 671 ஆகவும் பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 16 ஆயிரத்து 737 ஆகவும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 17 ஆகவும் எண்ணிக்கையில் உயர்ந்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களில் வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில் வாக்காளர் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 பேர் உள்ளனர்.
ஒரு பக்கம் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்துகொண்டே வந்திருப்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
அதாவது 2011 சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் வாக்குப் பதிவு 77.6% பதிவானது. அதையடுத்த 2016 சட்டமன்றத் தேர்தலில் 69.57% ஆக குறைந்தது. 2016 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்குப் பதிவு மேலும் குறைந்து 66.82சதவிகிதமாக நிலவியது.
ஆக வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், வாக்குப் பதிவு சதவிகிதம் கடந்த மூன்று பொதுத் தேர்தல்களில் படிப்படியாக ஈரோடு கிழக்கு தொகுதியில் குறைந்திருப்பது கவனிக்கத் தக்கது.
கட்சிகளின் வாக்கு சதவிகிதம்
ஈரோடு கிழக்கு தொகுதி இதுவரை மூன்று சட்டமன்ற பொதுத் தேர்தல்களை சந்தித்துள்ளது. இப்போது நான்காவதாக சட்டமன்ற இடைத் தேர்தலை சந்திக்கிறது. இடையில் 2014, 2019 நாடாளுமன்றத் தேர்தல்களையும் சந்தித்தது. கடந்த மூன்று சட்டமன்ற பொதுத் தேர்தல்களில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட கட்சிகளின் வாக்கு சதவிகிதப் புள்ளி விவரங்களைக் காணலாம்.
2011

2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக- தேமுதிக கூட்டணி, திமுக- காங்கிரஸ் கூட்டணி, பாஜக தனித்துப் போட்டி என்ற வகையில் தேர்தலை சந்தித்தன. அந்த தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாக தேமுதிக போட்டியிட்டது.
வாக்கு எண்ணிக்கையில் தேமுதிக வேட்பாளர் சந்திரகுமார் 50.83 சதவிகிதம் அதாவது 69,166 வாக்குகள் பெற்று வென்றார். திமுக இந்த தேர்தலில் 43.01 சதவிகிதத்துடன், 58,522 வாக்குகள் பெற்றது. 2011 தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாஜக 3244 வாக்குகளைப் பெற்றது. இது மொத்த வாக்குகளில் 2.38% ஆகும்.
2016

2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டது. திமுக -காங்கிரஸ் கூட்டணி அமைத்தும், தேமுதிக மக்கள் நலக் கூட்டணியிலும் போட்டியிட்டன.
அந்த வகையில் அதிமுக வேட்பாளர் தென்னரசு 43.83 சதவிகிதம், அதாவது 64,879 வாக்குகள் பெற்று வென்றார். திமுக காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் தேமுதிகவின் வேட்பாளர் சந்திரகுமார் உதயசூரியன் சின்னத்தில் நின்று 57,085 வாக்குகள் பெற்று, 38.57% வாக்குகள் பெற்றார். தேமுதிக தனித்துப் போட்டியிட்டு 6,776 வாக்குகள் பெற்றது. இது மொத்த வாக்குகளில் 4.58% ஆகும். இந்தத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாஜக 3.75 சதவிகிதத்துடன் 5,549 வாக்குகள் பெற்றது.
முதல் முறையாக தேர்தல் களம் கண்ட நாம் தமிழர் கட்சி 1.53 சதவிகிதத்துடன் 2,262 வாக்குகளைப் பெற்றது.
2021

2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா 44.27 சதவிகிதத்துடன் 67,300 வாக்குகள் பெற்று
வென்றார். இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தமாகா வேட்பாளர் யுவராஜா,38.41 சதவிகிதத்துடன் 58,396 வாக்குகளைப் பெற்றார். இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவிகிதம் 7.65ஆக அதிகரித்து 11,629 வாக்குகள் பெற்றது.
வெற்றி வித்தியாசம்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் கடந்த மூன்று சட்டமன்ற பொதுத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற வேட்பாளருக்கும் இரண்டாம் இடத்தைப் பிடித்த வேட்பாளருக்கான வெற்றி வித்தியாசம் கவனிக்க வைப்பதாக உள்ளது.
2011 தேர்தலில் வெற்றி வித்தியாசம் 10,644 ஆக இருந்தது. இதுவே 2016 சட்டமன்றத் தேர்தலில் 7,794 ஆக இருந்தது. 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி வித்தியாசம் 8,904 ஆக இருந்தது.
சர்ச்சை பேச்சால் சிக்கிய சேத்தன் சர்மா ராஜினாமா!
ட்விட்டர் இந்தியா நிறுவனங்களை மூடிய எலான் மஸ்க்: ஊழியர்கள் அதிர்ச்சி!