டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் -எடப்பாடி… ஈரோடு இடைத் தேர்தல் பட்ஜெட் எவ்வளவு?
வைஃபை ஆன் செய்ததும், ‘’ஈரோடு கிழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கிய செய்தி” ஃப்ளாஷ் நியூசாக இன்ஸ்டாவில் வந்தது. அதை ஒரு பார்வை பார்த்துவிட்டு வாட்ஸ் அப் மெயின் மேட்டரை டைப் செய்யத் தொடங்கியது.
“ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை ஒட்டி எல்லாருக்கும் முன்பே திமுக கூட்டணி அங்கே களமிறங்கிவிட்டது. திமுக கூட்டணியின் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவனுக்காக திமுக அமைத்திருக்கும் தேர்தல் பணிக்குழுவில் அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும் நிறைந்திருக்கிறார்கள்.
கே.என்.நேரு, எஸ். முத்துசாமி, எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர், இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தா.மோ. அன்பரசன் , சக்கரபாணி, மு.பெ.சாமிநாதன், வி.செந்தில் பாலாஜி , ஆவடி சா.மு.நாசர், கயல்விழி செல்வராஜ், அந்தியூர் செல்வராஜ்,
ஆகிய அமைச்சர்களும் மேலும் அமைச்சர்கள் அல்லாத மாவட்டச் செயலாளர்களும் தேர்தல் பணிக்குழுவில் அறிவாலயத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர பிற மாசெக்களும் அமைச்சர்களும் ஈரோடு இடைத் தேர்தலில் வேலை செய்கிறார்கள்.
திமுகவில் இப்படி என்றால் அதிமுகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 117 பேர் கொண்ட மெகா தேர்தல் பணிக் குழுவை அமைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆரம்பத்தில் மூன்று தினங்களாக சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுகவின் மாவட்ட அலுவலகத்தில் தொடர் ஆலோசனைகளை நடத்திய எடப்பாடி பழனிசாமி அதன் பின் அதிமுக தேர்தல் பணிக்குழுவினர் பட்டியலை தயாரித்தார்.
அதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இடம்பெற்றுள்ளனர். எடப்பாடிக்கு தற்போது இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் உறுதி செய்துவிட்டதால் திமுகவுக்கு நிகராக எடப்பாடி தரப்பில் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
சரி…இதெல்லாம் பெரிய கட்சிகள் இடைத் தேர்தல் என்றாலே செய்யும் அடிப்படை வேலைகள்தான். அதேநேரம் இதைவிட முக்கியமான ஒரு அம்சமாக இடைத் தேர்தலில் பார்க்கப்படுவது பட்ஜெட் தான். பட்ஜெட் என்றால் தேர்தல் செலவுகள் என்று வெளியே சொல்லப்பட்டாலும் ஓட்டுக்கு எவ்வளவு பணம் என்பதுதான் பட்ஜெட் என்பதன் உண்மையான அர்த்தம்.
தேர்தல் பணிக் குழுவுக்கு அடுத்து திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தீவிர ஆலோசனை நடத்தி வருவது ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுப்பது என்பது பற்றித்தான்.
திருமங்கலம் இடைத் தேர்தல் ஃபார்முலா என்று ஒரு வார்த்தைப் பயன்பாடு இன்னும் மக்கள் நினைவில் இருக்கிறது. அதற்குப் பிறகு நடந்துவரும் ஒவ்வொரு இடைத் தேர்தலிலும் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பணம், பரிசுப் பொருட்களின் அளவு உயர்ந்துகொண்டேதான் போய்க் கொண்டிருக்கின்றன.
இதற்கிடையே திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழாவின்போது அமைச்சர் நேரு வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவனிடம் தனிப்பட்ட முறையில் சற்று சத்தமாக பேசியதும் வீடியோவில் பதிவாக… அதை வைத்தே தேர்தல் ஆணையரை சந்தித்து பணம் கொடுப்பது பற்றி விவாதிப்பதாக புகார் அளித்தது.
இதுபற்றியெல்லாம் கவலைப்பட்டாமல் திமுக தரப்பில் வாக்காளர்களுக்கு என்ன வழங்குவது என்பது பற்றிய ஆலோசனை தொடர்ந்துகொண்டிருக்கிறது.
கடந்த இருபது மாத கால காட்சியில் தமிழகத்தில் நடக்கும் முதல் இடைத் தேர்தல் இது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களில் உத்தரப் பிரதேசம், ராம்பூர் சதார், கட்டௌலி, தெலங்கானாவில் முனுகோடே உள்ளிட்ட இடைத் தேர்தல்களில் எத்தனை ரூபாய் கொடுத்திருக்கிறார்கள், எத்தனை ரூபாய் டிரெண்டிங் கில் இருக்கிறது என்று ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள் திமுகவில்.
உத்தரப் பிரதேசத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலும் அங்கே பிரியாணி விருந்துதான் நடந்திருக்கிறது. அதாவது தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நாள் வரை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் தினமும் மூன்று வேளையும் சாப்பாடு போடுவார்களாம்.
ஆனால் தென்னிந்தியா முன்னேறிய பகுதியாயிற்றே. இங்கேதான் ஓட்டுக்கு பணம் என்ற கலாசாரம் உயர்ந்துகொண்டே வருகிறது., அதற்கு உதாரணமாக கடந்த வருடக் கடைசியில் தெலங்கானா மாநிலத்தின் முனுகோட் தொகுதியில் இடைத் தேர்தல் நடந்தது. இந்த இடைத் தேர்தலில் முதல்வர் கேசிஆரின் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியும் பாஜகவும் கடுமையாக மோதின.
முடிவில் ஆளுங்கட்சியான பிஆர் எஸ் தான் வெற்றிபெற்றது. இந்த ஒரு தொகுதி இடைத் தேர்தலுக்கு மட்டும் 627 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக ஃபாரம் ஃபார் குட் கவர்னன்ஸ் என்ற அமைப்பின் தலைவர் பத்மநாப ரெட்டி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார். அதில், ‘முனுகோட் தொகுதியில் நடைபெற்ற முறைகேடுகள் டிரெண்ட் செட்டராக மாறிவிடக்கூடாது’ என்று அவர் கவலை தெரிவித்திருந்தார்.
ஆனால் அந்த முனுகோடையே மிஞ்சும் வகையில் இப்போது திமுக, அதிமுக இரு கட்சிகளும் இங்கே ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கின்றன. அந்த இடைத் தேர்தலில் பிஆர் எஸ், பிஜேபி ஆகிய இரு கட்சிகள் அதாவது முக்கிய போட்டியாளர்கள் சார்பில் ஒரு ஓட்டுக்கு மொத்தம் 9 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டதாக பத்மநாப ரெட்டி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பொறுப்பாளர்கள், பணிக்குழுவினர் மூலம் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தங்களுக்கு சாதகமான வாக்காளர்களை இனம் கண்டு கணக்கெடுக்கும் பணியில் இருக்கிறார்கள்.
அதாவது திமுக தரப்பில் திமுகவின் உறுதியான வாக்காளர்கள், கூட்டணிக் கட்சியின் வாக்காளர்கள், நடுநிலையாளர்களில் தங்கள் பக்கம் இருக்கும் வாக்காளர்கள் பற்றிய புள்ளி விவரங்களை கடந்த ஒரு வாரத்துக்கும் மேலான களப்பணியில் திரட்டியிருக்கிறார்கள்.
அதேபோல அதிமுகவும் தங்களுக்கு சாதகமான வாக்காளர்கள், எதிரான வாக்காளர்கள் யார் யார் என்ற புள்ளி விவரங்களை திரட்டியிருக்கிறார்கள். இந்த கணக்கெடுக்கும் பணி முடிந்த பிறகுதான் பணப் பட்டுவாடா பணி தொடங்கும்.
முனுகோடு சாதனையை சமன் செய்யும் வகையில் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கலாம் என்று திமுக முடிவு செய்துள்ளது. இதன் பிறகு கோவை மாநகராட்சி தேர்தலை சந்தித்தததைப் போல தேர்தல் நெருக்கத்தில் வீட்டுக்கு வீடு வெள்ளி, தங்கம் போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கவும் திமுகவில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இதற்காக சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் கிப்டுகளுக்கான ஆர்டரும் திமுக தரப்பில் கொடுக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் எட்டாயிரத்து சொச்சம் வாக்குகளில்தான் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா வெற்றிபெற்றார்.
அப்போது கமல்ஹாசன் கட்சி பத்தாயிரம் வாக்குகள் பெற்றது. இப்போது கமலும் காங்கிரஸுக்கு ஆதரவு அளித்துள்ள நிலையில்… வெற்றி வித்தியாசம் இரண்டு மடங்குக்கு அதிகமாக இருக்க வேண்டும் என்று கருதுகிறது திமுக. அதனால் செலவு பற்றி கவலை இல்லாமல் தாராளமாக களமிறங்கியுள்ளது.
திமுகவில் இப்படி என்றால் அதிமுகவில்? எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்களோடும் நடத்திய முக்கிய ஆலோசனையே, ‘முன்னாள் அமைச்சர்கள் ஈரோடு கிழக்கு தொகுதிக்காக அதிகபட்சம் கோடி ரூபாய் கொடுக்க வேண்டும்’ என்பதுதான்.
பல அமைச்சர்கள் தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என்று மறுத்திருக்கிறார்கள். ஆனாலும் எடப்பாடிக்கு தெரியாதா, யாரிடம் எவ்வளவு இருக்கிறது என்று? அதனால் எவ்வளவு பணம் கொடுப்பீர்கள் என்ற உத்தரவாதத்தைப் பெற்றுத்தான் தேர்தல் பணிக்குழுவை நியமித்திருக்கிறார் எடப்பாடி.
மேலும் தற்போது இரட்டை இலையும் கிடைத்துவிட்டதால் கொங்கு தொழிலதிபர்கள் பலரிடமும் எடப்பாடி தரப்பு நிதி வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். ஏனென்றால் அதிமுகவுக்குள் தனது ஒற்றைத் தலைமையை நிரூபிக்கும் வாய்ப்பாக இந்த தேர்தலைப் பார்க்கிறார் எடப்பாடி. அதனால் அவரும் கோடிகளை இறக்க முடிவு செய்துவிட்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு திமுக தரப்பில் 5 ஆயிரம் கொடுத்தால் எடப்பாடியும் அதே அளவுக்கு கொடுக்க முடிவு செய்திருக்கிறார் என்பதுதான் ஈரோட்டின் இப்போதைய கரன்சி நிலவரம். இதைத் தாண்டி பரிசுப் பொருட்களும் படையெடுக்க இருக்கின்றன” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
பள்ளி மாணவிகளை பணக்காரர்களுக்கு விருந்து படைத்த கொடூரம்: மூடி மறைப்பது யார்?
குடிநீர் தொட்டியில் நாயின் சடலம் : தமிழ்நாட்டில் தொடரும் அவலம்!