டிஜிட்டல் திண்ணை: ஈரோடு கிழக்கு டோக்கன்… என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்?

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து இன்பாக்ஸில் சில படங்கள் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்துவிட்டு மெசேஜ் டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

“ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி நடைபெற்று அதில் திமுக கூட்டணி சார்பில் நின்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியை தனது 22 மாத கால ஆட்சிக்கான மக்கள் சான்றிதழ் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் குறிப்பிட்டார். இடைத்தேர்தல் முடிந்து திமுகவின் அனைத்து அமைச்சர்களும் மாவட்ட நிர்வாகிகளும் தங்களது அடுத்தடுத்த பணிகளில் இறங்கிவிட்ட நிலையில்… ஈரோடு கிழக்கு தொகுதி  வாக்காளர்கள் தங்களது பகுதிக்கு உட்பட்ட திமுக லோக்கல் நிர்வாகிகளிடம் தினம் தோறும் சென்று, ’என்னாச்சுங்க? என்ன ஆச்சுங்க?’ என்று கேட்டு வருகிறார்கள்.

ஜனவரி மூன்றாம் வாரத்தில் இருந்து பிப்ரவரி கடைசியில் தேர்தல் முடியும் வரை அந்தந்த பகுதியில் வாக்காளர்களுடன் நெருக்கமாக இருந்த லோக்கல் திமுக நிர்வாகிகள், ‘ இதோ வந்துடும்’ என்று பதில் சொல்லி அனுப்பி வருகிறார்கள்.

அவர்கள் எதை கேட்கிறார்கள் இவர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்று விசாரித்த போது தான்… திமுக தரப்பில் தேர்தலுக்கு ஒரு சில நாட்கள் முன்னதாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன் விவகாரம் தான் என்று தெரியவந்தது.

இடைத்தேர்தல் நாட்களில் வாக்காளர்களுக்கு பிரச்சாரத்தின்போதே தினமும் 200, 300, 500 என பணம் கொடுத்தது திமுக கூட்டணி. தேர்தல் நெருங்கிய நிலையில் ஓட்டுக்கு 3 ஆயிரம் ரூபாய் பணம் திமுக கூட்டணி சார்பில் கொடுக்கப்பட்டது. அதிமுக சார்பில் 2 ஆயிரம் ரூபாய் பணம் தரப்பட்டது. முதல் நாள் மாலை அதிமுக பணம் கொடுத்தது என்றால், திமுக சார்பில் மறுநாள் அதிகாலை  பட்டுவாடா செய்யப்பட்டது. இது தவிர திமுக சார்பில் தேர்தல் பணியாற்றிய அமைச்சர்கள் தத்தமது பொறுப்பு பகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக அந்தந்த ஏரியாக்களில் பரிசுப் பொருட்களை வளைத்து வளைத்துக் கொடுத்தார்கள். அதிமுகவினரும் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்களை கொடுத்தார்கள்.

 அப்போது தேர்தல் பணியாற்றிய சில திமுக மாசெக்கள், சட்டமன்ற உறுப்பினர்களே  பொறுப்பாளரான அமைச்சர் முத்துசாமியிடம், ‘மக்கள் பரிசுப் பொருட்களை விரும்பவில்லை.  மேலும் அதிமுக காரங்களும் பரிசுப் பொருள் கொடுக்குறாங்க. அதனால மூவாயிரத்தோடு கூட இரண்டாயிரம் சேர்த்துக் கொடுத்தால்  எடப்பாடியை டெபாசிட் இழக்கச் செய்யலாம்’ என்றனர். ஈரோட்டுக்கு பிரசாரத்துக்கு வந்த அமைச்சர் உதயநிதியிடமும் இதை முத்துசாமி எடுத்துச் சொல்லியிருக்கிறார்.  அவர் தலைவரிடம் கேட்போம் என்று பதில் சொல்லியுள்ளார். அதன் பிறகு பிரசாரத்துக்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலினிடமும் அமைச்சர் முத்துசாமி இது தொடர்பாக பேசினார். ஆனாலும் தேர்தலுக்குள் அடுத்த கட்ட பணப்பட்டுவாடா திமுக சார்பில்  தொகுதி முழுதும் நடக்கவில்லை. சில அமைச்சர்கள் கடைசி நேரத்தில் தங்களது  செல்வாக்கை உயர்த்த சில இடங்களில் கூடுதலாக பணம் கொடுத்திருந்தனர்.

இந்த நிலையில்தான்  தேர்தலுக்கு ஓரிரு நாள் முன்னதாக தொகுதியில் இருக்கும் 80% வாக்காளர்களுக்கு வீட்டுக்கு ஒரு டோக்கன் திமுக சார்பில் வழங்கப்பட்டது. இதில் 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருளையோ பணத்தையோ தேர்தலுக்குப் பிறகு பெற்றுக் கொள்ளலாம் என்று அப்போது திமுக நிர்வாகிகள் வாக்காளர்களிடம் கூறியிருக்கிறார்கள்.

அந்த டோக்கனைதான் பத்திரமாக வைத்திருந்து  தேர்தல் முடிந்த சில நாட்களில் இருந்தே தங்கள் பகுதி திமுக நிர்வாகிகளிடம்  எப்போது இந்த டோக்கனுக்கு உரிய பணமோ, பொருளோ கிடைக்கும் என்று கேட்டு வருகிறார்கள் மக்கள். ஒவ்வொரு நாளும் மக்கள் கேட்கும் கேள்விகளை திமுக நிர்வாகிகள் அமைச்சர்  முத்துசாமியிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து ஈரோடு மாநகர திமுக தரப்பில் விசாரித்தபோது, ‘தேர்தலுக்கு முன் கொடுத்த டோக்கனுக்கு  பணமாக கொடுப்பதா, பொருளாகக் கொடுப்பதா என்ற ஆலோசனை நடந்து வருகிறது. ஏற்கனவே மூவாயிரம் ரூபாய் கொடுத்துவிட்ட நிலையில், அதுபோக மீதி 2 ஆயிரம் மதிப்புள்ள பொருளோ பணமோ கொடுப்பதா அல்லது முழுதாக ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பதா என்பதுதான் இப்போது கேள்வி.  டோக்கன் கொடுத்தபோது  எழுதி வைக்கப்பட்ட பட்டியலை  எடுத்து அதை சரிபார்த்து  மீண்டும் அனுப்பும்படி லோக்கல் நிர்வாகிகளிடம் மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான முத்துசாமி கேட்டிருக்கிறார். அதன்படி அந்தந்த வாக்குச் சாவடிகளில் திமுக கூட்டணிக்கு  பதிவான வாக்குகளை எண்ணி அதோடு ஏற்கனவே கொடுக்கப்பட்ட டோக்கன்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டு புதிய பட்டியல் மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அனேகமாக இந்த செலவு அமைச்சர் முத்துசாமிக்குதான். 

ஒரு டோக்கனுக்கு ஐயாயிரம் என்றே கணக்கிடப்படும் என்று தெரிகிறது.  இன்னும் ஒரு வாரத்தில் டோக்கனுக்குரிய டெலிவரி செய்யப்படும் என்று சொல்லச் சொல்லியிருக்கிறார்கள். நாங்களும் எங்களிடம்  கேட்கும் மக்களுக்கு அதையே பதிலாக சொல்லிவருகிறோம்’ என்கிறார்கள் மாநகர திமுகவினர்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன்  போனது வாட்ஸ் அப்.

திருச்சி இளைஞர் மரணம் எச்3என்2 காரணமா?: கொரோனா காரணமா?

ஆஸ்கரில் ஜொலித்த தீபிகாவின் அசுர வளர்ச்சி!

+1
1
+1
6
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *