டெல்லி மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று (பிப்ரவரி 3) மாலையுடன் நிறைவடைந்தது.
டெல்லி சட்டமன்ற தேர்தல்!
இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது. erode east delhi election
இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இந்த தேர்தலில் தனித்தனியாக களம் காண்கின்றனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி ( ராம்விலாஸ் பஸ்வான்) ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு மீதமுள்ள 68 தொகுதிகளிலும் பாஜகவே களம் காண்கிறது.

மதுபான ஊழல் வழக்கில் டெல்லின் முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மியின் கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர். அதனால் இந்த தேர்தல் கெஜ்ரிவாலுக்கு மிக முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில் ராகுல் காந்தி, மோடி உள்ளிட்ட தலைவர்களும் கெஜ்ரிவால் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். என்டிஏ கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோர் கடைசி நாளான இன்று பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், இன்று மாலை 5 மணியுடன் டெல்லி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. பிப்ரவரி 5-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. டெல்லியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்று நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. erode east delhi election
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்!
காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவை அடுத்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 5-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, மற்றும் பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்த நிலையில், திமுக சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் களத்தில் உள்ளனர்.
வழக்கமான இடைத்தேர்தல் ஃபார்முலாவில் தேர்தல் பிரச்சாரம் நடைபெறவில்லை. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. ஈரோடு மாவட்ட அமைச்சர் முத்துசாமி மட்டுமே வேட்பாளருடன் வார்டு வார்டாக சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சீதாலட்சுமிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது பெரியார் குறித்து சீமான் கடுமையான விமர்சனம் செய்தார். மேலும், தேர்தல் விதிகளை மீறியதாக சீமான் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில், இன்று மாலை 6 மணியுடன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. பிப்ரவரி 5-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. erode east delhi election