எடப்பாடி வேட்பாளருக்கு போட்டியாக பன்னீரின் வேட்பாளர்: இரட்டை இலை முடங்குகிறதா?

அரசியல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளராக இன்று  (பிப்ரவரி 1)  காலை தென்னரசுவை அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில்… இன்று மாலை ஓ பன்னீர்செல்வம் தனது வேட்பாளரை அறிவித்துள்ளார்.

இன்று மாலை ஐந்து மணிக்கு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் வேட்பாளராக செந்தில் முருகன் போட்டியிடுவார் என்று அறிவித்தார்.

செந்தில் முருகனை கட்சியின் தீவிர விசுவாசி, தீவிர  உறுப்பினர் என்று அடையாளப்படுத்திய பன்னீர்செல்வம்…

எம்ஜிஆர் மீதும் ஜெயலலிதா மீதும் மிகுந்த பற்று கொண்டவர் என்றும், அவரது வெற்றி பிரகாசமாக இருக்கிறது என்றும் கூறினார். 

அதிமுகவின் இரண்டு அணிகள் சார்பாக இரண்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருப்பதால்  இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த பன்னீர்செல்வம்….

“அதிமுகவில் சட்டப்படி உட்கட்சித் தேர்தல் நடந்து நான் ஒருங்கிணைப்பாளராகவும் எடப்பாடி பழனிச்சாமி இணை  ஒருங்கிணைப்பாளராகவும்  தேர்ந்தெடுக்கப்பட்டோம். அதுதான் இன்றைக்கும் தேர்தல் ஆணையத்தின் பதிவுகளில் இருக்கிறது.

எங்களுடைய பதவி காலம் 2026 வரை இருக்கிறது. நாங்கள் இருவரும் சேர்ந்து தான் கழக சட்ட விதிப்படி கழகத் தேர்தலை நடத்தினோம். 

ஊரக உள்ளாட்சித் தேர்தல்,  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்,  மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்டவற்றை நடத்தினோம். சட்டப்படியான கழகத் தேர்தல் நடத்தப்பட்டு இது பற்றி அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையத்திலும் தாக்கல் செய்திருக்கிறோம்.

இதுவரை இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களின்படி ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர்தான் இருக்கிறோம்.

இந்த நிலையில் சின்னம் பற்றி முடிவெடுக்க வேண்டியது தேர்தல் ஆணையம் தான். இரட்டை இலை இல்லாமல் தனி சின்னம் கிடைத்தாலும் போட்டியிடுவோம்” என்று கூறினார்.

பாஜக போட்டியிட்டால் உங்களின் நிலை என்ன என்று கேட்கப்பட்டதற்கு, “ஏற்கனவே நான் எங்கள் தலைமை கழக நிர்வாகிகளுடன் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளை அவர்களது அலுவலகத்திற்கு சென்று சந்தித்தோம். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் எங்களுக்கு ஆதரவு கேட்டோம்.

ஒருவேளை இந்தத் தேர்தலில் பாஜக போட்டியிடுகிறது என்று சொன்னால் எங்கள் ஆதரவை தருவோம் என்றும் அன்றே வாக்குறுதி அளித்து வந்திருக்கிறோம்.

இப்போது பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் தங்களது வேட்பாளரை நிறுத்துவது பற்றி உறுதியான தகவல் எங்களுக்கு கிடைத்தவுடன் எங்களுடைய வேட்பாளரை திரும்ப பெற்றுக் கொள்வோம்” என்று அறிவித்தார் பன்னீர் செல்வம்.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி,  ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பினரும் வேட்பாளரை நிறுத்தியிருப்பதால்  கட்சியின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வேந்தன்

விதி மீறும் பட்டாசு ஆலைகள்: ஆட்சியர் கடும் எச்சரிக்கை!

வேட்பாளரை அறிவித்த ஈபிஎஸ்: பாஜக முடிவு என்ன?- அண்ணாமலை

+1
0
+1
3
+1
1
+1
2
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.