“எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளுங்கள்”: ஈரோடு கிழக்கில் எடப்பாடி பேச்சு!

அரசியல்

திமுகவினர் பணம் கொடுத்தால் வாங்கிக் கொண்டு அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார். இந்நிலையில் அஇஅதிமுக வேட்பாளர் அறிமுக பிரச்சார பொதுக்கூட்டம் வேப்பம்பாளையத்தில் இன்று (பிப்ரவரி 9) நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஜி.கே.வாசன், சி.பி.ராதாகிருஷ்ணன், கிருஷ்ண சாமி, ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “இன்று இந்தியாவே ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. நமது வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.

இந்த ஈரோடு கிழக்கு வெற்றி நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும். 2014ல் ஏற்காட்டில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இந்த ஏற்காட்டில் வெற்றி பெற்றால், 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் வெற்றி பெறுவோம் என்றார்.
அதேபோல ஏற்காடு தொகுதியில் 78 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். அதுபோன்று 2014 தேர்தலில் 38 இடங்களில் அதிமுக வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் மூன்றாவது கட்சியாக இடம் பெற்றது.

அதுபோன்று அதிமுக கூட்டணி வேட்பாளர் தென்னரசு வெற்றி பெற்றால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றி பெறும். அதற்காக நாம் இரவு பகலாக வேலை செய்ய வேண்டும்.

இன்றைக்குத் திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருட காலமாகிவிட்டது. ஆனால் ஈரோடு கிழக்கில் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போட வில்லை. ரவுடிகள் அட்டகாசம், கட்டப்பஞ்சாயத்து, போதைப் பொருட்கள் விற்பனை தான் நடக்கிறது. இதுதான் இந்த ஆட்சியின் சாதனை.

எம்.ஜி.ஆர்.ஆட்சியில் தான் கோவையில் இருந்து ஈரோடு பிரிந்தது. அதுபோன்று ஏராளமான திட்டங்களை நாங்கள் வழங்கியிருக்கிறோம். இதனால் மக்கள் ஏராளமான நன்மைகளை பெற்றிருக்கிறார்கள்.

நாம் பொருளாதாரத்தில் முன்னுக்கு வர வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொழிற்சாலை நிறைந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்கினார்.
ஈரோட்டை பொறுத்தவரை வேளாண்மை, ஜவுளி இரண்டுமே பிரதான தொழில். இரண்டுக்கும் முன்னுரிமை கொடுத்தது அதிமுக அரசு.

விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்தோம். அத்திக்கடவு அவினாசி திட்டம் ரூ.1652 கோடியில் நிறைவேற்றப்பட்டது. ஏரிகள் தூர்வாரப்பட்டது. அணைகள் கட்டப்பட்டது. ஒரு சொட்டு மழை நீர்கூட வீணாகாமல் நிலத்தடி நீரை உயர்த்திய அரசு அதிமுக அரசு.

ஜவுளி தொழில் செய்யும் கைத்தறி நெசவாளர்களுக்கு அதிமுக அரசு துணை நின்றது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கி வந்தோம்.

அதன் அடிப்படையில் ஈரோட்டில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என ஒவ்வொரு ஆண்டும் இலவச வேட்டி சேலை நெய்யும் பணி கொடுத்தோம். அதனால் அவர்களின் பொருளாதாரம் சீரடைந்தது.

ஆனால் அந்த ஆர்டரை திமுக அரசு கொடுக்கவில்லை. இதனால் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இதனால் தொழிலாளர்கள் வேலூருக்கு வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

உரிய நேரத்தில் ஆர்டர் கொடுக்காததால் விசைத்தறி தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வாக்குச் சேகரிக்க செல்லும் போது தொழிலாளர்கள் இதுபற்றி நம்மிடம் புலம்புகின்றனர்.

இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் இருக்கிறது என்று ஸ்டாலின் கூறுகிறார். சூப்பர் முதலமைச்சர் என்கிறார்.

ஆனால் எதில் சூப்பர் என்று கேட்டால், கலெக்‌ஷன், கரப்ஷன், கலெக்‌ஷனில்தான். எந்த அமைச்சர் அதிகமாக தலைமைக்கு கொடுக்கிறாரோ அவர்தான் சிறந்த அமைச்சர் என்று ஸ்டாலின் பாராட்டுகிறார். அதுதான் திமுகவினரின் பட்டியலிலும் உள்ளது.

அமைச்சர்கள் யாரும் நாட்டுமக்களுக்காக நன்மை செய்யவில்லை. ஈரோடு கிழக்கில் உள்ள பொது மக்கள் எல்லாம் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள்.
ஆனால் அவர்களை ஒரு குடோனில் மண்டபத்தில் அடைத்து வைத்திருக்கிறார்கள். ஆடு மாடு போல் அடைத்து வைத்திருப்பதை தேர்தல் அதிகாரிகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். திமுக மாவட்ட செயலாளர்கள் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அரசு அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும். ஆட்சியும் மாறும் காட்சியும் மாறும். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற வேண்டும். அதற்கு எதிராக செயல்பட்டால், நிச்சயம் எதிர்வினையையும் சந்திப்பீர்கள் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

சீப்பை ஒழித்துவிட்டால் திருமணம் நின்றுவிடுமா என்ன?. அதுபோன்று வாக்காளர்களை அடைத்துவிட்டால் அதிமுக வெற்றியை தடுத்துவிடலாம் என நினைக்க வேண்டாம். காற்றை யாராலும் தடுக்க முடியாது.

அமைச்சர்கள் தினம்தோறும் கிடா விருந்து போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. கூட்டணி கட்சிக்காக 20 அமைச்சர்கள் இறக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால் பயம் வந்துவிட்டது. இந்த பயமே நமக்கான வெற்றிக்கு அறிகுறி.

இந்த அமைச்சர்கள் எல்லாம் வீடு வீடாக சென்று ஆயிரம் கணக்கான ரூபாய் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். எத்தனை ஆயிரம் கொடுத்தாலும் இரட்டை இலைதான் தேர்தல் நேரத்தில் மக்களின் கண்ணுக்கு தென்படும்.

எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளுங்கள், கவலைப்படாதீர்கள். அதெல்லாம் உங்களுடைய பணம். கொள்ளையடித்து வைத்திருக்கிறார்கள். கொள்ளையடித்து வைத்த பணத்தை வாரி இறைக்கிறார்கள்.

ஸ்டாலின் திறமையற்ற முதலமைச்சர். எந்த துறையிலுமே நன்மை கிடைக்கவில்லை. அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டத்தை நிறைவேற்றி தற்போது ரிப்பன் வெட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

அதிமுகவின் குழந்தைக்கு ஸ்டாலின் பெயர் வைத்துக்கொண்டிருக்கிறார். அதை தவிர்த்து ஸ்டாலின் என்ன செய்தார். இவர் அப்பாவுக்கு நினைவு மண்டபம் கட்டியிருக்கிறார். மதுரையில் நூலகம் கட்டிகொண்டிருக்கிறார். எழுதாத பேனாவுக்கு நிதி ஒதுக்கியிருக்கிறார். நாட்டில் எவ்வளவு பிரச்சினை இருக்கிறது.

மறைந்த தலைவரை பற்றி பேசுவது சரியாக இருக்காது. கடலில் பேனா வைப்பதற்கு எல்லோரும் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். கடலில் வைத்தால் தான் வைத்த மாதிரி இருக்குமா?.

கருணாநிதி நினைவிடத்துக்கு முன்பு வைக்க வேண்டியதுதானே. 81 கோடி ரூபாயில் வைக்கப்போகிறார்கள். ஏன் இரண்டு கோடியில் வைத்தால் ஆகாதா?. அரசாங்க பணத்தை எடுத்து குடும்பத்துக்கு செலவு செய்துக்கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் நியாயமா?. மக்களுடைய வரி பணம் எல்லாம் வீணாக போக வேண்டுமா?

இன்று கூட, கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என்று ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் ஈரோடு கிழக்கில் மட்டும் கடந்த ஆட்சியில் 484 கோடி ரூபாய்க்கு பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் திட்டம் கொண்டு வந்துள்ளோம்.

ஆனால் இந்த திட்டத்தை முடக்கி 21 மாத கால ஆட்சியில் குடிக்க தண்ணீர் கூட கிடைக்காத நிலையை ஏற்படுத்தியுள்ளனர்” என்றார்.

தொடர்ந்து பொங்கல் தொகுப்பு குறித்து பேசிய அவர், “பொங்கல் தொகுப்பில் 21 பொருட்கள் கொடுத்தார்கள் என மக்கள் வேக வேகமாக சென்று பிரித்து பார்த்தார்கள், ஆனால் புளியில் பல்லி இருந்தது. அரிசியில் வண்டி ஓடியது. மிளகு பருத்தி கொட்டையாக இருந்தது.

வெல்லம் வாங்கியதில் 500 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார்கள். அதை வைத்துக்கொண்டுதான் இன்று வீதி வீதியாக சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள், ஓட்டு மட்டும் அதிமுகவுக்கு போடுங்கள்” என கூறினார்.

ஈரோட்டில் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் பற்றி பேசிய அவர், “திமுகவினர் இந்த 21 மாதத்தில் என்ன திட்டத்தை செயல்படுத்தியுள்ளீர்கள். தில்லு இருந்தால் சொல்லுங்கள்.

ஸ்டாலினும், அமைச்சர் மா.சுப்பிரமணியும் வாக்கிங் போகிறார்கள். அப்போது நாட்டு பிரச்சினை பற்றி எல்லாம் பேசவில்லை. ஆனால் அவர் மகன் நடித்த படம் எப்படி ஓடுகிறது என்று கேட்கிறார்.

உதயநிதிக்கு பட்டாபிஷேகம் செய்து அமைச்சர் ஆக்கியிருக்கிறார். உதயநிதியும், ஸ்டாலினும் எவ்வளவு வேடிக்கை காட்டுகிறார்கள். ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை நடத்தி வரும் உதயநிதி எல்லா படங்களையும் வாங்கி வெளியிடுகிறார். அடிமாட்டு விலைக்கு வாங்கி கோடி கோடியாக கொள்ளையடிக்கிறார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 150 படங்கள் முடங்கிக் கிடக்கிறது. சினிமா துறையையே முடித்து கட்டிவிட்டார்கள்.

இதுமட்டுமின்றி இவர்கள் ஆட்சியில் மின் கட்டணம், சொத்து வரி. குடிநீர் கட்டணம் எல்லாம் உயர்த்தியிருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் 4.8 லட்சம் கோடி கடனை விட்டுச் சென்றுவிட்டார்கள் என்று ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்து 2 வருடங்கள் ஆகப்போகிறது. இந்த காலகட்டத்தில் 1.62 ஆயிரம் கோடி கடனை வாங்கியிருக்கிறார்கள்.

விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை. மூன்று முறை மத்திய அரசாங்கம் அகவிலைப்படி உயர்த்தியும், தமிழகத்தில் உயர்த்தவில்லை. பழைய ஓய்வூதியம் வழங்கப்படும் என்றார்கள். அதுவும் ஏமாற்று வேலை. 2021 சட்டமன்றத் தேர்தலின் போது 520 அறிவிப்பு வெளியிட்டார்கள், இதில் 85 சதவிகிதம் நிறைவேற்றிவிட்டோம் என்கிறார் ஸ்டாலின்.

ஆனால் மாதம்தோறும் பெண்களுக்கு 1000 கொடுப்போம் என்று கொடுத்த வாக்குறுதிக்கு நாமம் போட்டுவிட்டார். கேஸ் சிலிண்டருக்கு மானியம் கொடுக்கவில்லை. முதியோர் உதவித் தொகையை நிறுத்திவிட்டார்கள்” என்று திமுக அரசைக் கடுமையாக விமர்சித்தார்.

பிரியா

இளமை திரும்புதே..காதலில் விழுந்த பில்கேட்ஸ்

100 பில்லியன் டாலரை இழந்த கூகுள்: செய்த தவறு என்ன?

+1
2
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *