ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வம் குஜராத்துக்குப் புறப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணி சார்பில் அதிமுகவே போட்டியிடுகிறது என எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மறுபக்கம் ஓ.பன்னீர் செல்வம் தாங்களும் போட்டியிடுவதாக அறிவித்தார்.
இதனை முன்னிட்டு நேற்றைய தினம் இரு அணி தலைவர்களும், கூட்டணிக் கட்சித் தலைவர்களான ஜி.கே.வாசன், அண்ணாமலை, ஜான் பாண்டியன் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசினர்.
பாஜக யாருக்கு ஆதரவு என இதுவரை தெரிவிக்கவில்லை. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், ”பாஜகவின் நிலைப்பாடு என்னவோ, அதுவே எங்களது நிலைப்பாடு” என்று தெரிவித்தார்.
முன்னதாக எடப்பாடி பழனிசாமி அணியினருடனான சந்திப்பைத் தொடர்ந்து ஜி.கே.வாசன், அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.
இதுபோன்று ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஓ.பன்னீர் செல்வம் இன்று (ஜனவரி 22) காலை குஜராத் புறப்பட்டுள்ளார்.
அவருடன் மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட ஆதரவாளர்களும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நடைபெறும் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொள்ள அவர் பயணம் மேற்கொண்டிருப்பதாகவும், அங்கு பாஜகவின் முக்கிய பிரதிநிதிகளைச் சந்தித்து தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு தெரிவிப்போம் என்று பன்னீர் செல்வம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா