ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சித் தலைவர்களை ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஜனவரி 21) சந்திக்கிறார்.
முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக ஓபிஎஸ் ஈபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்துள்ளது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் அதிமுக போட்டியிடுகிறது என கூட்டணி கட்சியான தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
கடந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில் இந்த முறை அதிமுக போட்டியிடுகிறது.
இதனால் அதிமுக – காங்கிரஸ் இடையே நேரடி போட்டி உருவாகியுள்ளது.
இந்த சூழலில் அதிமுகவில் தனி அணியாக இருக்கும் ஓ. பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் இன்று காலை அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுகிறோம். பாஜக போட்டியிட்டால் தேசிய கட்சி என்ற அடிப்படையில் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அக்கட்சியை ஆதரிப்போம்.
தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான் தான். எனவே தேர்தல் படிவமான பி படிவத்தில் கையெழுத்திட தயாராக இருக்கிறேன்.
இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டால் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவோம்” என்று தனது நிலைப்பாட்டை தெரிவித்து இருந்தார்.
ஓபிஎஸ் அணி களம் இறங்க முடிவு செய்துள்ள நிலையில் பன்னீர்செல்வம் இன்று கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் குறித்து பேச உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்தியலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணன், ஜேசிடி பிரபாகர்,
மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசனை அவரது இல்லத்தில் இன்று காலை சந்திக்க உள்ளோம்.
பின்னர் மாலை 4 மணியளவில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையை கமலாலயத்தில் சந்திக்க உள்ளோம்.
தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி ஆகியோரையும் சந்திக்க உள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஜி.கே.வாசனை இன்று காலை அவரது இல்லத்தில் சந்தித்து தேர்தல் குறித்து பேசி வருகிறார் ஓ.பன்னீர் செல்வம். முன்னதாக, எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, பெஞ்சமின் ஆகியோர் சந்தித்தனர்.
அதன்பிறகே அதிமுகவுக்கு அதரவளிக்கிறோம் என ஜி.கே.வாசன் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
கோயம்பேடு வழி மெட்ரோ ரயில்கள் நிறுத்தம்!
8 ஆண்டுகளில் 10 முறை தோல்வி: அஜித் குறித்து அல்போன்ஸ் புத்திரன்