ஈரோடு இடைத்தேர்தலில் அரசியல்வாதிகள் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார்கள், ஆனால் சுறுசுறுப்பாக செயல்படவேண்டிய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பறக்கும் படைகளும் பாதுகாப்பில் ஈடுபட்டுவரும் போலீஸும்தான் சுணக்கமாக இருக்கிறார்கள்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் உட்பட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
37 வார்டு, 238 பூத், 2 லட்சத்து 28 ஆயிரத்து 402 வாக்குகள், 77 வேட்பாளர்கள், அவர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய, வெளியிலிருந்து களம் இறங்கியிருக்கும் திமுக, அதிமுக, காங்கிரஸ், எம். எல். ஏ. க்கள், அமைச்சர்கள், எம் பி. க்கள், முன்னாள் எம். எல். ஏ.க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், ஒன்றிய நகர மாநகர நிர்வாகிகள் என சுமார் 20 ஆயிரம் பேரும், இரண்டாயிரம் கார்களில் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டுள்ளனர்.
திமுக, அதிமுக இரண்டு கட்சியினரும் அவரவர் கட்சி நிர்வாகிகளுக்கு தினந்தோறும் பூத்துக்கு 20 ஆயிரம் – 25 ஆயிரம் என செலவு செய்து வருகின்றனர். மேலும் வாக்காளர்களுக்கு இரண்டு கட்சியினரும் 300 முதல் 500 வரையில் தினம்தோறும் வழங்கி வருகின்றனர்.
பூத் செலவு வகையில் ஒரு பூத்துக்கு ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் 238 பூத்களுக்கும் திமுக சார்பில் செலவு செய்யப்படுகிறது. இதுவே மொத்தம் 59 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருகிறது. அதிமுக ஒரு நாளைக்கு ஒரு பூத்துக்கு 20 ஆயிரம் ரூபாய் தருகிறது.
அந்த வகையில் ஒரு நாளைக்கு 47 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அதிமுகவுக்கு செலவாகிறது. தினந்தோறும் தொகுதியில் இருக்கும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய் தருகிறது திமுக. இது 6 கோடி ரூபாய் ஆகிறது. அதிமுக தலா 300 ரூபாய் தருகிறது. இது 3.6 கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கிறது. இதெல்லாம் போக சாப்பாடு, மது என்று ஒரு நாளைக்கு மட்டும் ஈரோட்டில் சுமார் 10 கோடி ரூபாய் செலவாகிறது என்று தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் கழகத்தினரே சொல்கிறார்கள்.
இந்த பணத்தை அரசியல்வாதிகள் அன்றாடம் வலம் வரும் வாகனங்களில்தான் எடுத்து வந்து போகிறார்கள். தேர்தல் கமிஷன் அமைத்துள்ள பறக்கும் படைகளும், வாகன பரிசோதனை செய்யக்கூடிய சோதனை சாவடிகளிலும் என்னதான் செய்கிறார்கள் என்று தொகுதியில் இரவும் பகலுமாக ரவுண்ட்ஸ் வந்தபடி இருக்கிறோம்.
இரண்டு இரவுகளாக நாம் சுற்றியும் இதுவரையில் நமது வாகனத்தையும் பரிசோதனை செய்யவில்லை, மற்றவர்கள் வாகனத்தையும் பரிசோதனை செய்யவில்லை. திருநகர் காலனி சோதனை மையம், வீரப்பன் சத்திரம், வஉசி பூங்கா போன்ற பகுதிகளில் சோதனை செய்தாலும் அந்த சோதனை எப்படி இருக்கிறது தெரியுமா?
கார், பைக்குளை மறித்து எங்கே இருந்து வருகிறீர்கள், எங்கே போகிறீர்கள் என பெயர் மற்றும் விலாசத்தை கேட்டுக் கொண்டு அனுப்பி வைக்கிறார்கள்.
அதைவிட கொடுமை, வீரப்பன் சத்திரம் அசோக புரம், காவிரி நகர் பகுதியில் திமுகவினர் வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்தனர், ஒரு இடத்தில் ஷாமியானா பந்தல் போட்டு சிவப்பு கம்பளம் விரித்து வாக்காளர்களை வரவழைத்து பண விநியோகம் செய்தனர். அதன் எதிரில் பறக்கும் படை போலீஸ் ஜீப் பாதுகாப்பாக நின்றதுதான் வேதனையிலும் வேதனை.
–வணங்காமுடி
ஜடேஜா, அஷ்வின் அதிரடி: 113 ரன்களில் அவுட்டான ஆஸ்திரேலியா
“எனக்கு அண்ணன் மாதிரி”: மயில்சாமி குறித்து உதயநிதி உருக்கம்!