ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று (ஜனவரி 24) மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதில் போட்டியிட அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வரும் நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாதிரி வாக்குகள் பதிவு செய்யப்பட்டு சரிபார்க்கும் பணி தொடங்கியது.
அதிமுக, திமுக, காங்கிரஸ் என அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னணியில், பொதுவான பெயர், பொதுவான சின்னங்களைக் கொண்டு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மாதிரி வாக்குப்பதிவை ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் நடத்தும் அதிகாரியான ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
“தேர்தலுக்காக 1480 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளன. இன்று 5 சதவிகித இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இவற்றில் 1 சதவிகித இயந்திரங்களில் 1200 வாக்குகளும், 2 சதவிகித இயந்திரங்களில் 1000 வாக்குகளும், மேலும் 2 சதவிகித இயந்திரங்களில் 500 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டு அவை சரிபார்க்கப்படும்.
தற்போது பார்த்தது வரை இயந்திரங்கள் எல்லாம் தயார் நிலையில் இருக்கிறது. மாதிரி வாக்குப்பதிவைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
கடந்த வாரம் பெங்களூரில் இருந்து வந்த பெல் நிறுவன பொறியாளர்கள் 8 பேர் கொண்ட குழு இந்த இயந்திரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 20 இயந்திரங்களில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
43 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை!
புதிதாக மாற்றப்படும் பெரியார் நினைவிடம் : அமைச்சர்கள் ஆய்வு!