ஈரோடு கிழக்கு: எடப்பாடி போடும் கணக்கு!
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க வின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் விருப்பத்தை த.மா.கா ஏற்றுக்கொண்டதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று (ஜனவரி 20) தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியின் சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் இயக்கத்திற்கு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
இத்தொகுதியில் த.மா.கா வேட்பாளராக அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும் வாசனுக்கு மிகவும் நெருக்கமானவருமான எம். யுவராஜா போட்டியிட்டார். அப்போது அதிமுகவின் நிபந்தனையின்படி யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.
காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா சமீபத்தில் மரணமடைந்த நிலையில் இத்தொகுதியில் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில் கடந்த 16 ஆம் தேதி அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்துப் பேசினார்.
அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பற்றி அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். ஏற்கனவே போட்டியிட்ட தொகுதி என்ற அடிப்படையில் மீண்டும் தமாகாவே போட்டியிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளும் தானும் விரும்புவதாக அப்போது எடப்பாடியிடம் ஜி.கே.வாசன் கூறியிருக்கிறார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி, ‘உங்கள் விருப்பத்தில் நியாயம் இருக்கு. நீங்க மூத்த தலைவர். . உங்களுக்கு நாங்க ஆதரவு கொடுக்குறோம். ஆனா ஓட்டுக்கு பணம் எங்களால் கொடுக்க முடியாது.
தேர்தல் செலவை நீங்களே பாத்துக்குற மாதிரி இருக்கும். தவிர கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தல்ல இரட்டை இலை சின்னத்துலதான் நீங்க நின்னீங்க. இன்னிக்கு வரைக்கும் தேர்தல் ஆணையத்துல அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்னுதான் பதிவாகியிருக்கு.
அந்த வகையில நீங்களே மறுபடியும் நின்னீங்கன்னா ஓபிஎஸ், சசிகலா ரெண்டு பேரும் இரட்டை இலை சின்னத்தை ஆதரிக்கிறோம்னு அறிவிச்சுடுவாங்க. நம்ம உழைப்புல கிடைக்கிற வாக்குகள்ல தங்களுக்கும் பங்கிருக்குனு சொல்லுவாங்க.
அவங்க ரெட்டை இலைக்கு ஆதரவு தெரிவிச்சா நம்ம யாரும் மறுக்கவும் முடியாது. இதை வச்சே ஒருங்கிணைந்த அதிமுகனு அவங்க மறுபடியும் குரல் கொடுக்க ஆரம்பிச்சிடுவாங்க.
அதனால எனக்கும் தர்ம சங்கடமான சூழல் ஏற்படும். அதனால இந்த முறை நாங்களே போட்டியிட்டுக்குறோம். இரட்டை இலை கிடைக்கறதுக்கு என்ன பண்ணனுமோ அதை நான் பாத்துக்குறேன். இந்த பிரச்சினையை என்கிட்ட விட்டுடுங்க ’ என வாசனிடம் சொல்லியிருக்கிறார் எடப்பாடி.
இதுபற்றி கட்சியினரிடம் பேசிவிட்டு சொல்வதாக 16 ஆம் தேதி எடப்பாடியிடம் இருந்து விடைபெற்றார் ஜி.கே.வாசன்.
இதற்கிடையே கட்சி மூத்த நிர்வாகிகளிடம் வாசன் ஆலோசித்திருக்கிறார். அப்போதுதான் இன்னொரு பிரச்சினை தமாகாவுக்குள் எழுந்தது. ‘ஈரோடு கிழக்கு தொகுதியை அதிமுக கூட்டணியில தமாகா போட்டியிட்டது. மீண்டும் அந்த தொகுதியில் தமாகா நின்றால் வேட்பாளராக யுவராஜா இருக்கக் கூடாது.
விடியல் சேகரை நிறுத்த வேண்டும். அவர்தான் அந்த தொகுதிக்காரர். எனவே மீண்டும் யுவராஜாவுக்கு கொடுக்கக் கூடாது’ என்று தமாகா தலைமை நிர்வாகிகளே வாசனிடம் வலியுறுத்தினார்கள்.
மேலும் சில நிர்வாகிகள் வாசனிடம், ‘இப்போது வரை தேர்தல் ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள்தான் இன்னமும் பதிவில் இருக்கின்றன. இந்த நிலையில் நாம் எடப்பாடியிடம் மட்டுமே பேசிக் கொண்டிருப்பது சரியா? ஓபிஎஸ் சிடமும் பேசியிருக்கலாமே? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு வாசன் எடப்பாடி கையில்தான் அதிமுக இருக்கிறது’ என்று பதிலளித்திருக்கிறார்.
மேலும் எடப்பாடி தன்னிடம் கூறியவற்றை தனது நிர்வாகிகளிடம் எடுத்துச் சொல்லி, ‘திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளருக்கு திருமகன் ஈவெராவின் அனுபதாப அலை இருக்கும். மேலும் அரசு பலத்தோடு போட்டியிடும் நிலையில் நாம் போட்டியிட்டு சக்தியை செலவு செய்ய வேண்டாம்’ என்று முடிவெடுத்துள்ளார்.
இதற்கிடையே ஜனவரி 19 ஆம் தேதி ஈரோட்டில், ஈரோடு கிழக்கு தமாகா நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டிய யுவராஜா, இடைத்தேர்தல் பணிகள் பற்றி ஆலோசித்திருக்கிறார்.
இந்த நிலையில்தான் ஜனவரி 19 ஆம் தேதி எடப்பாடி சார்பில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, பெஞ்சமின், கோகுல இந்திரா உள்ளிட்டோர் ஜி.கே.வாசனை சந்தித்து ஆலோசித்திருக்கிறார்கள்.
அதிமுகவின் தலைமைச் சிக்கலுக்குள் நாங்கள் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை என்று முடிவெடுத்திருந்த வாசன் தன்னை சந்தித்த அதிமுக பிரதிநிதிகளிடம், ‘நீங்களே போட்டியிட்டுக் கொள்ளுங்கள்’என்று தெரிவித்துவிட்டார்.
இந்த தகவலை அவரே எடப்பாடியிடமும் தெரிவித்தார். அதன்படியே வாசன் இன்று (ஜனவரி 20) அறிக்கை மூலம் இதை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக அதிமுகவின் சிக்கல், தன் கட்சிக்குள் நிலவும் சிக்கல் என இரட்டை சிக்கலில் இருந்து நழுவி விட்டார் வாசன்” என்கிறார்கள் தமாகா- அதிமுக வட்டாரத்தில்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் வழக்கறிஞர்களிடமும் சட்ட நிபுணர்களிடமும் ஆலோசனை செய்து ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட அனுமதி பெற வேண்டும் என்ற முயற்சியை முடுக்கிவிட்டிருக்கிறார்.
இதற்காக வழக்கறிஞர்கள் தேர்தல் ஆணையத்தில் முறையிடுவதற்காக டெல்லி சென்றிருக்கிறார்கள். ஒருவேளை ஓபிஎஸ் தலையீட்டின் பேரில் இரட்டை இலையே கிடைக்காமல் போனாலும் கூட ஈரோட்டில் அதிமுகவுக்குள்ள கட்டமைப்பை பயன்படுத்தி தனக்கு ஒதுக்கப்படும் சின்னத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து அதிக வாக்குகளைப் பெறுவது என்ற திட்டத்திலும் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இந்த பின்னணியில்தான் பன்னீர் செல்வம் வரும் 23 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி பற்றி ஆலோசனை நடத்த இருக்கிறார். எப்படியும் அதிமுகவுக்கும் இரட்டை இலைக்கும் சிக்கலான நிலைதான் நிலவுகிறது.
–ஆரா
நல்லாட்சியின் அடையாளம்: ரோஸ்கார மேளாவில் மோடி பேச்சு!