ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, அமமுக, தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
இதில் ஓபிஎஸ் அணி சார்பில் தங்களது வேட்பாளர் திரும்ப பெறப்படுகிறார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று (பிப்ரவரி 7) அமுமுக பொதுச் செயலாளர் தினகரனும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் அறிவிக்கப்பட்டு களத்தில் பரப்புரை பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்த சூழலில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஒதுக்கப்பட்ட,
பிரஷர் குக்கர் சின்னத்தை இடைத்தேர்தல் காலங்களில் ஒதுக்கிட முடியாது என தலைமை தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமுமுக சார்பில் கடந்த ஜனவரி 27 மற்றும் ஜனவரி 31 ஆகிய தேதிகளில் அளிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் இன்று பதிலளித்து உள்ளது.
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பொதுத்தேர்தல் காலங்களில் குக்கர் சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம் தற்போது இடைத்தேர்தல் காலங்களில் அவ்வாறு ஒதுக்கீடு செய்ய இயலாது என தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற பொதுதேர்தல் ஓராண்டு காலத்திற்குள் வரவிருக்கும் சூழலில் புதிய சின்னத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும்.
எனவே வரவிருக்கிற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி சின்னமான குக்கர் சின்னத்தோடு தேர்தலை சந்திப்போம்.
இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தவிர்ப்பதே சரியாக இருக்கும் என்ற தலைமை கழக நிர்வாகிகளின் ஆலோசனையை கருத்தில் கொண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமுமுக போட்டியிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரியா
ஐசிசியின் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருது: பரிந்துரை பட்டியலில் இந்திய வீரர்கள்!
புலிக்கு பிறந்தது பூனையாகாது : சாதனை பட்டியலில் சந்தர்பால் & கோ!