ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகளின் பரப்புரை சூடு பிடித்து வருகிறது.
பிப்ரவரி 12 மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் ஈரோட்டில் சாதி ஓட்டு… சபரீசன் விசிட், எடப்பாடி சைலன்ட், சீமான் ட்விஸ்ட்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
இந்த நிலையில் பிப்ரவரி 13ஆம் தேதி இரவு ஈரோடு கிழக்கு தொகுதியில் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசினார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்.
அப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் முதலியார் வாக்குகளை குறிவைத்து முதலமைச்சர் ஸ்டாலினுடைய மாப்பிள்ளை சபரீசன் வந்து போனதை பற்றி குறிப்பிட்டு பேசினார்.
“இந்த தொகுதியில் முதலியார் வாக்குகள் அதிகம் இருக்குன்னு எவனோ சொல்லிட்டான். அங்கிருந்து தனது மருமகன் சபரீசனை அனுப்பி விட்டார். முதலியாரும் முதலியாரும் பேசி அந்த வாக்குகளை வாங்கி விடலாம் என்று திட்டம் போட்டார்.
சபரீசன் பேசிவிட்டால் முதலியார்கள் எல்லாம் உங்களுக்கு ஓட்டு போட்டு விடுவார் என்று நினைக்கிறீர்களா?
முதலில் முதலியார் என்றால் யார் என்று தெரியுமா? மானத் தமிழ் மக்களடா… உனக்கு வரலாறு தெரியுமா?
எங்கள் முன்னோர்கள் சேர சோழ பாண்டியர்கள் இருக்கையிலே அவர்களுக்கு பட்டாடை நெய்து கொடுத்தவர்கள் இந்த மக்கள். நெசவு மட்டும் செய்து கொண்டிருந்தார்கள் என்று நினைக்காதே…
போர் என்று வரும்போது முதலில் யார் என்று செவ்வேல் ஏந்தி களத்திலே பாய்ந்ததால் அவன் முதலியார். இந்த வரலாறு உனக்கு தெரியுமா?
விஜயநகர பேரரசு வந்த பிறகு முதலியார்களை கூப்பிட்டு உங்கள் மன்னர்களுக்கு பட்டாடை நெய்து கொடுத்ததை போல எங்களுக்கும் நெய்து கொடுங்கள் என்று உத்தரவிட்டார்கள்.
ஆனால் இவர்களோ வேற ஆளை பாருடா என்று கூறி விட்டார்கள். வேறு வழி இல்லாமல் குஜராத்தில் இருந்து சௌராஷ்டிராக்களை இறக்கினார்கள் இந்த விஜய நகர மன்னர்கள். தன்மானமிக்க தமிழர்கள் நிறைந்த நாடு இது. இங்கே நீ சாதியை சொல்லி வாக்கு வாங்கி விட முடியாது.
தமிழ்நாடு ஒரு நூல் இழையில் வரலாற்று தவறு செய்து விட்டது. அண்ணாவுக்கு பிறகு நெடுஞ்செழியனிடம் போயிருந்தால் நாடு உருப்பட்டிருக்கும்.
நாமும் உருப்பட்டிருப்போம். நாம் இன்று இந்த கட்சி ஆரம்பித்து இருக்கவே வேண்டாம். ஊழல் லஞ்சம் இல்லாத நேர்மையான தலைவன் நெடுஞ்செழியன்” என்று பேசினார் சீமான்.
நெடுஞ்செழியன் அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் (இன்று நாகப்பட்டினம் மாவட்டம்) வடக்காலத்தூர் கிராமத்தில் முதலியார் சமுதாயத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேந்தன்
வரி ஏய்ப்பு புகார்: சென்னையில் ஐடி ரெய்டு!
உலக காதலர் தினம்: அதிர்ச்சி கொடுக்கும் ரோஜா விலை!