ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பிரச்சாரம் செய்ததாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனவரி 25-ஆம் தேதி முதல் சீதாலட்சுமிக்கு ஆதரவாக சீமான் பிரச்சாரம் செய்து வந்தார்.
இந்தநிலையில், ஜனவரி 26-ஆம் தேதி தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெறாமல் சீமான் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக ஒரே நாளில் நான்கு வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில், நேற்று (ஜனவரி 28) நேரிக்கல் மேடு பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டு வேட்பாளருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பிரச்சாரம் செய்ததாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி நவீன் அளித்த புகாரின் பேரில் சீமான் மீது கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்,
மேலும், நேற்று நடந்த கூட்டத்தின் போது, “பெரியார் கையில் வைத்திருப்பது வெறும் வெங்காயம் தான். என் தலைவன் பிரபாகரன் கையில் வைத்திருப்பது வெடிகுண்டு.
பெரியாரின் வெங்காயத்தை என் மீது வீசு. நான் என் தலைவன் தந்த வெடிகுண்டை உன் மீது வீசுவேன். என்ன நடக்கும் என்று பார்ப்போம். உன்னை புதைத்த இடத்தில் புல் கூட முளைக்காது” என்று சீமான் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீமானின் இந்த பேச்சுக்கு திமுகவினர் பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.