ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிகாரியாக இருந்த மணிஷ் மாற்றம் செய்யப்பட்டு, புதிய அதிகாரியாக ஸ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஜனவரி 20-ஆம் தேதி அன்று திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 47 பேர் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி மணிஷ் அறிவித்தார்.
இந்தநிலையில், கர்நாடகா மாநிலம் கே.ஆர்.புரம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் பத்மாவதி வேட்புமனு ஏற்கப்பட்டதற்கு மற்ற சுயேட்சை வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சட்டமன்ற தேர்தலில் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட அனுமதியில்லை என்று அவர்கள் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டனர். இதனையடுத்து வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் குழப்பம் நீடித்தது.
தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின், சுயேட்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு இரவு 1.30 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
வேட்பாளர் பட்டியல் இறுதி செய்வதில் குழப்பம் ஏற்பட்டது சர்ச்சையான நிலையில், ஈரோடு கிழக்கு தேர்தல் அதிகாரியாக இருந்த மணிஷ் மாற்றப்பட்டு ஓசூர் மாநகராட்சி ஆணையராக இருந்த ஸ்ரீகாந்த் தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.