தமிழ்நாடு அரசியல் மட்டுமன்றி இந்திய அரசியலையே கவனிக்க வைக்கும் அளவுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரம் பரபரப்பாக இருக்கிறது.
திமுக காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக வேட்பாளர் இவிகே எஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டு பணிமனைகள் திறக்கப்பட்டு தேர்தல் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில் அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி 117 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை ஏற்கனவே அமைத்தார். அதை அடுத்து ஓ. பன்னீர்செல்வமும் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழுவை அமைத்தார்.
பாஜகவின் ஆதரவு யாருக்கு என்று எடப்பாடி பழனிசாமியும் பன்னீர் செல்வமும் தங்களுக்குள் தீவிரமான போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஜனவரி 31ஆம் தேதி கமலாலயத்தில் இரண்டு முக்கியமான கூட்டங்கள் நடந்தன.
முதலில் பெருங்கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டமும் அதற்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டமும் நடைபெற்றது.
பெருங்கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக தேவை இல்லாமல் தனது ஆற்றலை செலவு செய்ய வேண்டாம் என கருதுகிறேன். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் நமது கட்சி சார்பில் நடைபெற இருக்கும் தமிழ்நாடு அளவிலான பாதயாத்திரை வெற்றி பெறுவதற்கான ஏற்பாடுகளை நாம் இப்போது இருந்தே செய்ய வேண்டும். இடைத் தேர்தலில் நாம் அக்கறை செலுத்த வேண்டாம்” என்று பேசினார்.
இதையடுத்து நடந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திலும் அண்ணாமலை இதைத்தான் குறிப்பிட்டார். ஆனால் தேசிய தலைமையிடம் நமது நிலைப்பாட்டை தெரிவித்து விட்டோம் அவர்கள் ஒப்புதல் அளித்த பிறகு இன்னும் இரண்டு நாட்களில் முறைப்படி நாம் அறிவிப்போம் என்று அண்ணாமலை இந்த கூட்டத்தில் சொல்லி இருக்கிறார்.
இதையடுத்து தான் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் திருப்பதி நாராயணன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை அதிமுக காத்திருப்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் எடப்பாடி தரப்பில் இருந்து பாஜக நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார்கள். “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவுக்கு நிகராக எடப்பாடி பழனிச்சாமி ஆரம்பத்தில் இருந்து தீவிரமான களப்பணியை முடுக்கிவிட்டு இருக்கிறார்.
தேர்தல் பணிக்குழு அமைத்து வீடு வீடாக சென்று ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் வாக்காளர்கள் உண்மையான வாக்காளர்கள் தானா அல்லது முகவரி மாறி இடம் பெயர்ந்தவர்களும் இன்னும் வாக்காளர் பட்டியலில் இருக்கிறார்களா என்ற ஆய்வு பணியை முதலில் செய்தது எடப்பாடி தரப்பு.
இந்த அடிப்படையில் தான் சுமார் 20000 வாக்காளர்கள் இந்த தொகுதியிலேயே இல்லை என்று கண்டறிந்து இது குறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையரிடம் அதிமுக சார்பில் ஜெயக்குமார் ஒரு முறையீடை அளித்தார்.
இவ்வாறு அதிமுக அதன் இயல்பான பலத்தோடு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொண்டு இருக்கையில் ஒரு சிறு குழுவின் தலைவராக இருக்கும் பன்னீர்செல்வத்தைப் பயன்படுத்தி அதிமுக பிளவு பட்டிருப்பது போன்ற தோற்றத்தை பாஜக தொடர்ந்து ஏற்படுத்தப் பார்க்கிறது. இதெல்லாம் வேண்டாம்.
ஆதரவு அளிப்பதாக இருந்தால் இன்றைக்குள் சொல்லுங்கள். இல்லையேல் நாளை நாங்கள் வேட்பாளரை அறிவிக்கப் போகிறோம். ஏற்கனவே சொன்னதுதான் வந்தால் உங்களோடு, இல்லையேல் மக்களோடு” என்று அண்ணாமலையிடம் தகவலை சேர்த்துவிட்டனர் எடப்பாடி தரப்பினர்.
பாஜகவினரும் தனியாக சென்று தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகுவை சந்தித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினரின் பணப் பட்டுவாடாவை தடுக்கும்படி மனு அளித்தனர்.
இந்த நிலையில்தான் பிப்ரவரி 1 ஆம் தேதி காலை ஈரோட்டில் அதிமுகவின் தேர்தல் பணிமனை திறப்பு விழா நடந்தது. அதில் தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்ற மேடை முகப்பு வைக்கப்பட்டு அரசியல் அரங்கை அதிர வைத்தது.
அந்த மேடை முகப்பில் மோடி, அமித் ஷா, அண்ணாமலை ஆகியோரது படங்கள் இல்லை. மாறாக ஜி.கே.வாசன், டாக்டர் கிருஷ்ணசாமி, பூவை ஜெகன் மூர்த்தி ஆகிய தலைவர்களின் படங்களே இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில் பாஜக கூட்டணி இல்லாமலேயே அதிமுக கூட்டணி அமைத்துவிட்டதாக தகவல்கள் பரவின.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம், தேர்தல் பணிமனை திறக்க வருகை தருவதாக இருந்த எடப்பாடி பழனிசாமி தான் வராமல் சேலத்திலேயே இருந்து வேட்பாளர் தென்னரசு என்ற அறிவிப்பை வெளியிட்டார். பாஜகவுக்கு ஒரு பதற்றத்தை ஏற்படுத்தவே இவ்வாறு செய்த எடப்பாடி பழனிசாமி அதேநேரம் அந்த நிகழ்வில் தான் நேரடியாக கலந்துகொள்ளாமலும் தவிர்த்தார்.
அதிமுகவின் கூட்டணி பெயர் மாற்றம் பற்றி பிப்ரவரி 1 ஆம் தேதி பகலில் பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அதற்கு உரிய முறையில் பதிலளிப்பேன்” என்று அடக்கி வாசித்தார் அண்ணாமலை.
இதற்கிடையே எடப்பாடி பழனிசாமியிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிப்ரவரி 1 ஆம் தேதி போனில் பேசியிருக்கிறார். அப்போது எடப்பாடி பழனிசாமியிடம், ‘அண்ணா… நாங்க போட்டியிடப் போறதில்ல. உங்ககிட்டதான் கட்சி இருக்குனு மேலிடத்துல சொல்லியிருக்கோம். மேலும் சில பேர் மேல ரெஃபர் பண்ணியிருக்காங்க. அவங்க சொன்னவுடனே நான் சொல்லிடறேன்’ என்றவர் ஈரோடு கிழக்கு பேனரில் கூட்டணி பெயர் மாறியிருப்பது பற்றியும், பாஜக தலைவர்கள் படம் இல்லாதது பற்றியும் கேட்டிருக்கிறார் அண்ணாமலை.
அதற்கு எடப்பாடி பழனிசாமி, ‘நான் சேலத்துல இருக்கேன். ஈரோட்ல கட்சிக்காரங்க ஏதாவது பண்ணியிருப்பாங்க. நான் பாக்குறேன்’ என்று பதிலளித்திருக்கிறார். இதையடுத்து பிப்ரவரி 1 ஆம் தேதி மாலையே, ஈரோடு கிழக்கு அதிமுக தேர்தல் பணிமனையில் பேனர், ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி’ என்று மீண்டும் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே ஆடிட்டர் குருமூர்த்தியின் தீவிர ஆதரவு மற்றும் ஆலோசனையின்படி செயல்பட்டு வரும் ஓ. பன்னீர் செல்வம் பிப்ரவரி 1 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தன் வீட்டில் பிரஸ் மீட் வைத்து தன் சார்பிலான அதிமுக வேட்பாளரை அறிவித்தார். இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற கேள்வி அரசியல் அரங்கில் மீண்டும் எழுந்துள்ளது.
எப்போதுமே போல்டாகவும் தெளிவாகவும் உடல்மொழியை வெளிப்படுத்தும் அண்ணாமலை கடந்த சில தினங்களாகவே நிதானமாகவும், அமைதியாகவும் காணப்படுகிறார்.
அதிமுகவில் கிட்டத்தட்ட முழுமையான பகுதி எடப்பாடியிடம்தான் இருக்கிறது என்பதை அண்ணாமலை உணர்ந்தாலும், வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவைத் தோற்கடிக்க எடப்பாடி, பன்னீர், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைந்த அதிமுகவே சரியாக இருக்கும் என்று கருதுகிறார்.
இதையேதான் பாஜக மேலிடமும் கருதுகிறது. பாஜக மேலிடத்தை கவர்வதற்கான முயற்சிகளில்தான் பன்னீர் செல்வமும் பிப்ரவரி 1 ஆம் தேதி வேட்பாளரை அறிவித்துவிட்டு… ‘பாஜக நின்றால் ஆதரவு தருவோம். எங்கள் வேட்பாளரை வாபஸ் பெறுவோம். சசிகலாவை சந்தித்து ஆதரவு கேட்போம். பழனிசாமியுடன் சமரசத்துக்கு தயார்’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி தன்னை பாஜக ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை, இரட்டை இலை சின்னத்தை முடக்கினாலும் பரவாயில்லை. தனி சின்னத்தில் போட்டியிட்டாவது கட்சியை மீட்டெடுப்பது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
ஆனால் பன்னீர் செல்வம்தான் பாஜக மாநில தலைமையை விட தேசிய தலைமையை கவர்வதிலேயே அதிக கவனத்தோடு செயல்பட்டு அதிமுகவை ஒருங்கிணைத்துவிட வேண்டும் என்ற படபடப்போடு இருக்கிறார்.
பிப்ரவரி 3 ஆம் தேதி அண்ணா நினைவு தினத்தை ஒட்டி எடப்பாடி பழனிசாமி சென்னை வருகிறார். அப்போது அவரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஆடிட்டரோடு ஆலோசித்து அடுத்த ஆட்டத்தை ஆடலாம் என்று திட்டமிட்டு வருகிறார் ஓ. பன்னீர்.
நகர்வுகள் இப்படி இருக்க ஈரோடு கிழக்கு களத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணியும், எடப்பாடி பழனிசாமியின் அதிமுகவும் மட்டுமே விறுவிறுப்பான தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்த பரபரப்புக்கு மத்தியில் அண்ணாமலை நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
-ஆரா
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: ராகி சூர்மா லட்டு!